Breaking News
Home / செய்திகள் / கறுப்பு ஜூலை

கறுப்பு ஜூலை

ஜூலை மாதம் தமிழர்தம் வலி சுமந்தமாதம். சிங்கள அரசு 1983ஆம் ஆண்டில் இதே மாதத்தில் சிங்கள காடையர்களை ஏவி தமிழர்களின் உயிர், உடமைகள் அனைத்தையும் பறித்து, சொந்தநாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக்கியது. பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்படையினர் எனப்பெயரில் மட்டும் காவலை வைத்துக்கொண்டு, சிங்கள இனவாதம் கைகட்டி வேடிக்கை பார்த்த மாதம். சிறிலங்கா அரசு இரண்டே நாட்களில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழரை கொன்றும் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டோரை ஊனமுமாக்கியது.

காலம்காலமாக சிங்கள அரசு திட்டமிட்டு அரங்கேற்றிவரும் இனப்படுகொலைகளின் கோரமுகமே ஜுலை இனவழிப்பு. முப்பத்திநான்கு ஆண்டுகளூக்கு பின்பும், அதே உத்வேகத்தோடு சிங்கள இனவாதம் இப்போதும் கொழுந்துவிட்டு எரிகிறது. சர்வதேசம் சிங்கள அரசின் கைகளிலுள்ள இரத்தக்கறைகளை வேகம் வேகமாக துடைத்து உண்மைகளை மூடிமறைக்க முனைகின்றது.

சிங்கள அரசு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் தாம் ஏற்றுக்கொண்ட பிரகடனங்களுக்கு மாறாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. சுயாதீன சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கிய சட்ட வலையமைப்பு, இராணுவ அபகரிப்புக்குட்பட்ட மக்களின் நிலவிடுவிப்பு, காணாமல் போனோருக்கான நீதி என எதையும் நடைமுறைப்படுத்த மறுக்கிறது. தமிழரின் ஒற்றுமையை குலைக்கும்வகையில் வட மாகாணசபைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தமுனைகின்றது.

வலிகளே வாழ்க்கையாய் போன ஈழத்தமிழினம் செய்வது யாதென்றறியாது மரத்துபோய் நிற்கும்வேளையில், ஈழத்தில் கோப்பப்புலாவு, மருதங்கேணி, முல்லைத்தீவு போன்ற பல இடங்களில் தொடர்போராட்டங்கள் நூறு நாட்களைத்தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே தாயக உறவுகளும் புலம்பெயர் மக்களும் ஒன்றாய் எம் ஒற்றுமையை உரக்க சொல்லவேண்டிய தருணம் இது.

கறுப்பு ஜூலையின் உக்கிரத்தை உலகறியச்செய்வோம். சமகால அரசியல்நிலையை சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்துவோம். வலிகளையும் துரோகங்களையும் காலங்காலமாக சுமந்து பழகிய நாம், இன்றையநாளில் ஒன்றாய் ஓர்குலமாய் இணைவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com