Breaking News
Home / சிறப்புப்பதிவுகள் / தலைவரும் அந்த நேரத்து போக்குவரத்தும்…

தலைவரும் அந்த நேரத்து போக்குவரத்தும்…

ஆரம்பநாட்களில் தலைவர் இந்த நாள் இத்தனை மணிக்கு சந்திக்கிறேன் என்று சொன்னால் நாம் அந்த இடத்துக்கு போவதற்கு இரண்டு மூன்று மணித்தியாலம் முந்தியே அவர் அந்த இடத்தில் மக்களோடு மக்களாக எங்காவது எட்டத்தில் நின்றபடி எம்மை பாhத்திருப்பார்.
அல்லது குறித்த நேரத்தில் நாம் அங்கு போய் ஓரிரண்டு மணித்தியாலம் பிந்தி வருவார்.

அமைப்பின் ஆரம்பநாட்களில் மிக பிரச்சனையாக இருந்த விடயமே போக்குவரத்தும்
தங்குமிடமும்தான்.

ஆரம்பநாட்கள் என்று இங்கு எழுதுவது 1983யூலைக்கு முன்பான காலம்.. நாம் பெரிதாக வளராத காலம்.

திடீரென எம்மை சங்கர் உட்பட எம் மூவரை அழைத்து இன்றைக்கு இரவே நெல்லியடி போங்கோ.அங்கே ஒரு கொஞ்சம் வேலை இருக்கு… நான் நாளைக்கு பின்னேரம் 4:30மணிக்கு நெல்லியடி சந்திக்கு பஸ்ஸில் வருவேன்.
எனக்கு ஒரு சைக்கிள் கொண்டு வைத்திருந்து நில்லுங்கோ என்பார்.
நாமும் நெல்லியடிக்கு சைக்கிள் உழக்கி போய் அங்கு சையன்ஸ்சென்ரரில் படிப்பதற்காக அறை எடுத்து இருக்கும் நண்பர்களிடம் கெஞ்சி மண்டாடி தங்கி மறுநாள் எழுந்து தலைவரை சந்திக்க 4:30 மணிக்கு நெல்லியடி சந்திக்கு யாழில் இருந்துவரும் பஸ்ஸை பாhத்து காத்து நின்றால் ஒரு 5மணி அளவில் நெல்லியடி சந்தியில் இருக்கும் ஏதாவது ஒரு கடையில் இருந்து வருவார்.
எமக்கு முன்னமே , தான் சொன்ன நேரத்துக்கு 2 மணித்தியாலம் முந்தியே நெல்லியடி வந்து எம்மை பாhத்தபடி எமக்கு தெரியாமலேயே இருப்பார்.அதுவும் எம்மை கண்டவுடன்கூட உடனே வரமாட்டார். எம் முகபாவனை, எம் பக்கத்தில் யார் யார் நிற்கிறார்கள் எல்லாம் பாhத்ததே வருவார்.

சில நாட்களில் நெல்லியடிசந்திக்கு வரும் பஸ்களை நாம் பார்த்தபடி காத்து நிற்க ஆள் நெல்லியடிசந்திக்கு பல தரிப்பிடம் முந்தி குஞ்சர்கடையில் இறங்கி நடந்தே வருவார்.
இதுவே அந்த நேரத்து நடைமுறை..நெல்லியடி என்றாலும் யாழ்நகரப்பகுதியில் எந்த இடம் என்றாலும் தெல்லிப்பளை என்றாலும் ஆவரங்கால் சிறுப்பிட்டி என்றாலும் மாங்குளம் என்றாலும் அம்பகாமம் என்றாலும் திருமலை என்றாலும். இதே நடைமுறைதான்.
அவரை கண்டவுடன்கூட உடனே கதைக்க தொடங்கமுடியாது.. அவருக்கு பின் அல்லது எங்களுக்கு பின்கூட யாராவது புலனாய்வாளர் (சிஐடி) தொடர்ந்து வந்திருக்கலாம் என்பதால்..!

அவர் சந்திக்க சொன்ன இடத்தில் அவரை சந்தித்தாலும்கூட, உதாரணமாக நெல்லியடி சந்தி என்றால் அதில் அவரை கண்டாலும் முன்பின் அறிமுகம் இல்லாத யாரோ ஒருவரை பார்க்கும் பாவனையிலேயே எமது முகபாவம் இருந்தாக வேண்டும்.
ஆனால் அவர் கண்களை கவனித்தே ஆக வேண்டும். அதுதான் அடுத்த விடயத்தை ஒரு நொடிக்குள் சொல்லும்.தவறவிடக்கூடாது அந்த கண்மொழியை..!! பிறகு வாங்கும் பேச்சுக்கு அளவிருக்காது..

தன்னை பின் தொடரும்படி கண்மொழி தந்து நடந்தால் பெரிய இடைவெளிவிட்டு அவருக்கு பின்னால் போகவேண்டும்.அவர் நெல்லியடி பொன்மகள் புத்தககடைக்குள் புகுந்தால் நாமும் போக வேண்டும். அங்கு எமக்கு பின் எவரும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியவாறே கதைக்க ஆரம்பிப்பார்.

முதலாவது கேள்வியே ஏதாவது சாப்பிட்டீங்களோடா என்பதுதான்.தெரியும் சாப்பிட காசு இல்லை என்று ஆனாலும் தங்குகிற அறை நண்பர்களின் சாப்பாட்டில் பங்கிட்டு இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு..!!
தந்தையின் பரிவு அது..ஆனாலும் தன் பிள்ளைக்கு விரும்புவதை கொடுக்க முடியாத ஒரு தந்தையின் அல்லது அண்ணனின் வார்த்தைகளில் எழுத முடியாத சோகத்தை முகம் ஒரு கணம் காட்டி மறைக்கும்.

நாம் அவரிடம் நீங்கள் சாப்பிட்டீங்களோ அண்ணை என்றால் ஏதோ சமாளித்து இன்றைக்கு இரவு சாப்பிடுவோம் என்பார்.

இந்த விசாரிப்புகள் முடிய சைக்கிள்ட கொண்டு வரச்சொன்னேன் எங்கே என்பார்.
சைக்கிளை குடுத்தால் அதனை உடனே ஓட ஆரம்பிக்க மாட்டார். சைக்கிளை வேகமாக ஒருக்காக உருட்டி திடீரென பிரேக் அமத்தி அதன் பிரேக் வடிவா வேலை செய்யுதோ என்று பார்ப்பார்.ஒரு அவசர நிலையில் திடீரென காவல்துறை வந்து சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்போது மறித்தால் பிரேக்கும் பிடிக்காது விட்டால் காலால் பிரேக் பிடித்து பிறகு இடுப்பில் இருந்து பிஸ்ரல் எடுத்து சுடுவது எல்லாமே பிழைத்துவிடும்.
அதனையும் மிக கிண்டலாக சொல்வார் பிறகு அவனோடை மோதி விழுந்து எழும்பித்தான் சுடவேணும் என்று.

பிரேக் சரியான முறையில் இருந்தால் அவர் ஓடிக்கொண்டே திடீரென நிறுத்தி இலக்கை சுடும் வல்லமை உள்ளவர். அவரின் ஒரு செக்கன் குறி பார்ப்பு போதும்.
பிரேக் முழுமையானதாக இருக்கிறது என்றாலேயே சைக்கிள் ஓடுவார்.
இந்த இடத்தில் தலைவரின் சைக்கிள் பயணங்கள் பற்றி. அந்த நேரங்களில் இயக்கத்தின் முக்கிய போக்குவரத்து சாதனம் சைக்கிளே..
இயக்கத்துக்கு என்று சில ஏசியா சைகக்கிள்கள் வாங்கப்பட்டிருந்தன. 1980க்கு பிறகு..
தலைவர் சில நேரங்களில் தானே சைக்கிள் ஓடி போவார் ஏதாவது அலுவல் என்றால் யாராவது ஒருத்தரை அழைப்பார் நீ இன்றைக்கு ஓடு நான் முன்னுக்கு இருக்கிறன என்பார்.
அவரை ஓடுவது பெரிய பிரச்சனை இல்லை..சைக்கிள் ஓடும் போது முன்னுக்கு இருந்தபடி அவர் கேட்கும் கேள்விகள் அதுஇது என்று..!
அதனால் கூடுதலாக எல்லோரும் மனதுள் வேண்டிக்கொள்வார்கள் என்னை கூப்பிடக்கூடாது என்று..
அவரை வைத்து ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென கேட்பார் ‘இப்ப போச்சே ஒரு கறுப்பு சோமசெற் கார், அது கொஞ்சம் முந்தி எங்களை கடந்து போய் திரும்ப வந்தது கவனித்தியோ ‘ என்பார்.

அந்த நேரம்தான் ஒரு தீர்ப்பு நேரம் மாதிரி இருக்கும். ஓம் கவனிச்சன் என்றால் ஏன் சொல்லேல்லை என்பார் கவனிக்க வில்லை என்றால் போராளி ஒருவனுக்கு ஒரு தூரத்து பார்வையும் கிட்ட பார்வையும் இருக்க வேணுமென்று நிறைய சொல்லுவார் சைக்கிளில் இருந்தபடியே..!!

திடீரென எம்மை தாண்டி போகும் வாகனத்தின் இலக்கம் கவனிச்சியா என்பார்.பொய் சொல்ல முடியாது . அவர் கவனித்திருப்பார்.,
அவரை முன்னுக்கு இருத்தி நாம் சைக்கிள் ஓடினாலும் அவர் சைக்கிளின் கைபிடியில் இருக்கும் எம் கைகளை பார்த்தே சொல்லுவார் நேரே பார்த்து ஓடு ஏன் வீதியாலை போற ஆட்களை பார்க்கிறாய் என்று…

திடீரென ஒரு செக்களுக்குள் சொல்லுவார் இந்த வலது பக்க ஒழுங்கைக்குள் விடு என்று.. கொஞ்சம் தாமதமானால் சைக்கிளால் கீழே இறக்கி நிற்பார்ட்டி நிறைய சொல்லுவார். எப்படி எந்தநேரமும் ஒரு ஆயத்தநிலையில் (அலேர்ட்) இருப்பது என்றும் நிறையசொல்லுவார்.
அந்த நேரம் இயக்கத்திடம் இருந்த சைக்கிள்கள் எல்லாமே பெடல் ரிப்ளெக்ரரும் இருக்கை ரிப்பெக்ளரரும் உடைத்தே வைத்திருந்தோம். இரவில் அது வீதியால் பல மைல் தூரம் பின்னுக்கு வரும் பொலீசுக்கு ஒளிவீசிடும் என்பதால்.
அவரது பஸ்பயணங்களில் அவர் ஒருபோதும் போகின்ற இடத்துக்கான ரிக்கற்றை எடுத்தது இல்லை. யாழில் இருந்து அச்சுவேலி போறது என்றால் பருத்தித்துறை என்றே எடுப்பார். புன்னாலைகட்டுவன் போறது என்றால் காங்கேசன்துறை என்றே எடுப்பார்.
இன்னும் நிறைய எழுதலாம். அந்த பயணங்கள் பற்றி..ஒவ்வொரு பொழுதும் அவர் கற்பித்தார் தனது நடைமுறை மூலம்.அவர் கற்றுக் கொண்டார் தினமும் அனுபவங்களில் இருந்து..
அந்த அதிமானுடன் விடுதலைக்கான ஒரு பெரும் தவத்தை தினமும் கணமும் செய்தவர்… ஒரு விடுதலை அமைப்பை அணுகிஅணுகி செதுக்கி வளர்த்தவர்.அதற்காகவே அத்தனை ஆற்றலையும் பயன்படுத்தியவர்.
இன்னும் நிறைய எழுதலாம். எழுதவேணும்.
– ச.ச.முத்து –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com