Breaking News
Home / செய்திகள் / அச்சத்துக்குள்ளாகியுள்ள ஐரோப்பிய நாடுகளின் நத்தார் பண்டிகை……?

அச்சத்துக்குள்ளாகியுள்ள ஐரோப்பிய நாடுகளின் நத்தார் பண்டிகை……?

நத்தார் பண்டிகை மற்றும் ஆங்கில புதுவருட பிறப்பு என்பன அண்மித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறான பண்டிகைகளை கூட்டமாக ஒன்று சேர்ந்து சந்தோசமாக கொண்டாடி பழக்கப்பட்ட ஐரோப்பிய நாட்டு மக்கள் இந்த ஆண்டு பெரும் அச்சத்தின் மத்தியிலேயே இருக்கின்றனர்.

அண்மைய காலங்களாக ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்தாண்டு நவம்பர் 13 ம் திகதி பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் இன்று வரையிலும், ஐரோப்பாவின் ஏனைய நாடுகளை நோக்கி விரிவு படுத்தப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.

குறிப்பாக அண்மைய காலமாக ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் பின்னணியில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு இருப்பதாகவும், தாக்குதல்கள் அனைத்துக்கும் அந்த அமைப்பு உரிமை கோரியுள்ளமையும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளை ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு இலக்கு வைத்து ஏன் தாக்குதல் நடத்த வேண்டும் ..? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பானது சிரியாவின் பல பகுதிகளையும் குறிப்பாக அலெப்போவினை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது.

இதில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் உலக நாடுகளுக்கு பெரும் சவால் விடுக்கும் வகையில் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகளும் இருந்துள்ளன.

இதன் காரணமாக சவுதி அரேபியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக நேரடி தாக்குதலை மேற்கொள்ள தொடங்கியிருந்தனர்.

இந்த தாக்குதல் நடவடிக்கையினால் பெரும் பின்னடைவை சந்தித்த ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டு பகுதிகளையும் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அத்துடன், இந்த தாக்குதலின் காரணமாக பாரிய நிதி நெருக்கடியினையும் சந்திக்க வேண்டி எற்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே தற்போது ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு ஐரோப்பிய நாடுகளை குறிவைத்துள்ளது.

குறிப்பாக தம் மீது தாக்குதலை மேற்கொள்ளும் நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியிலேயே கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் பாஸ்டிலி விழாவின் போது மர்ம நபர் ஒருவர் மக்கள் கூடியிருந்த இடத்தில் கனரக வாகனம் ஒன்றை மோத செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

86 பேரின் உயிரை காவு கொண்ட இந்த ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியிருந்தனர். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கையினையும் விடுத்திருந்தனர்.

கடந்தாண்டு நவம்பர் 13 ம் திகதி பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு அடுத்தபடியாக, அந்நாட்டில் நடத்தப்பட்ட மற்றொரு பாரிய தீவிரவாத தாக்குதலாக இது கருதப்பட்டது.

மேலும், இந்த தாக்குதலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை இன்று வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

இந்நிலையில், நைஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அச்சத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வெளிவராத நிலையில் கடந்த 19 ஆம் திகதி மீண்டும் ஒரு கொடூரமான தாக்குதல் ஒன்று ஐரோப்பாவில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஆம் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நத்தார் சந்தை தொகுதி ஒன்றில் பாரிய கனரக வாகனம் ஒன்றை மோத செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என கூறப்பட்ட போதிலும் பின்னர் இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 11 பேர் வரையில் கொல்லப்பட்டனர். அத்துடன், குறித்த தினத்தில் துருக்கி நாட்டுக்கான ரஷ்ய தூதுவரும் அங்காராவில் வைத்து சுட்டுகொலை செய்யப்பட்டார்.

மேலும், அதே நாளில் மற்றும் ஒரு ஐரோப்பிய நாடான சுவிட்ஸர்லாந்தில் இஸ்லாமிய பள்ளிவாசலை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர். இவ்வாறு ஜேர்மன், துருக்கி, சுவிட்ஸர்லாந்தில் ஒரே நாளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கூட்டமாக ஒன்று சேர்ந்து பண்டிகைகளை கொண்டாடும் ஐரோப்பிய நாட்டு மக்கள், இந்த சூழ்நிலையில் கடைகளுக்கு செல்வதற்கும், கூட்டமாக ஒன்று சேர்வதற்கும் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த தாக்குதலை அடுத்து பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், இந்த தாக்குதலை அடுத்து மக்கள் மத்தியில் அச்ச உணர்வு வேரூன்றி இருப்பதாகவும், இதன் காரணமாக அவர்களின் நத்தார் பண்டிகையும் அச்சம் நிறைந்த ஒன்றாகவே இருப்பதாகவும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com