Breaking News
Home / சிறப்புப்பதிவுகள் / நவம்பர் 27 – ஈழத்தில் தமிழர் அறிவித்த செய்தி – தமிழின்பன்.

நவம்பர் 27 – ஈழத்தில் தமிழர் அறிவித்த செய்தி – தமிழின்பன்.

625.117.560.350.160.300.053.800.210.160.90எங்கள் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த மகிந்த அரசு, எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களையாவது விட்டு வைத்திருந்தால் இந்த அரசை மன்னித்திருப்போம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மாவீரர்கள் இந்த மண்ணுக்காக தம் உயிரை தியாகம் செய்தவர்கள். அவர்கள் ஆயுதம் ஏந்த காரணமே இலங்கை அரசுதான் என்பதை அந்த அரசே இன்று ஒப்புக்கொள்ளுகின்றது.

ஆனால் தம் மக்கள் வாழும் நிலத்திற்காக போராடிய எங்கள் தேசப் புதல்வர்களின் விழிதுயில் கொள்ளும் விதை நிலங்களையும் சிங்கள அரசு அழித்தது என்பது வரலாற்றில் மறக்க முடியாத வடுவாகும்.

போருக்குப் பின்னர் எங்கள் மக்கள் மாவீரர் தினத்தை கொண்டாடுவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். தங்களுக்காக களமாடி வீர மரணம் எய்தியவர்களுக்கு தீபம் ஒன்றை ஏற்றி, உருகி, விழி நீர் ஊற்ற சிங்கள அரசு தடுத்தது.

மாவீரர் நாட்களில் அரச படைகள் போர் நடவடிக்கையில் ஈடுபடுவது போல்செயற்பட்டு மக்களை அச்சுறுத்தி, கோயிலில் மணி அடிக்கத் தடுத்து எத்தனைஅட்டகாசங்களை இழைத்தது.

இனியும் எம் மக்கள் அழவும் முடியாதவர்களாய் வாழ முடியாது என்று எம் தேசப் புதல்வர்களுக்கு இம்முறை துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்துவதே காலத்தின்தேவையறிந்த போராட்டம் எனக் கருதி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தைபுனரமைக்கும் சிந்தனையை முன்வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

பாராளுமன்ற உறுப்பினரின் வழிநடத்தலின் கீழ் கிளிநொச்சி அறிவக இளைஞர்கள் பணியை முன்னெடுத்தனர்.

எவர் எந்தக் காரணத்தை சொல்லி தடுத்தாலும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு துயிலும் இல்லத்தில் விளக்கேற்றும் உரிமையை தடுக்க முடியாது.

சிவஞானம் சிறீதரன் அவர்களின் அழைப்பை ஏற்று மாவீரர் குடும்பங்கள் ஒன்று திரண்டன. தேங்காய் உடைத்து சிரமதானப் பணி தொடங்கியது.

kele-7

மாவீரர் நாளுக்கு வெறும் இரண்டு நாட்கள்தான் இருந்தது. மாவீரர் குடும்பத்தை சேர்ந்த பத்து இளைஞர்கள் துயிலும் இல்லத்தில் நுழைந்து எருக்கலை மரங்களைப் பிடுங்கத் தொடங்கினார்கள்.

மளமளவென இளைஞர்களும் மக்களும் திரளத் தொடங்கினார்கள். எப்போது துயிலும் இல்லத்திற்குள் நுழைவோம்? என்று காத்திருந்தைப்போல, இம்முறையாவது எங்கள்உறவுகளுக்கு விளக்கேற்ற முடியுமா? என்று காத்திருந்ததைப்போல மக்கள் வரத்தொடங்கினார்கள்.

செய்தியறிந்து, வந்த மக்கள் மிக உற்சாகமாக சிரமதானத்தில் ஈடுபட்டார்கள். சிரமதானம் தொடங்கிய நாளில் மதியமளவில் துயிலும் இல்லம் வெளிக்கத் தொடங்கியது.

மேற்குப் பக்கமாக பெருத்த எருக்கலைக் காடுகளும் உண்ணி மரங்களும் அடர்ந்து காணப்பட்டன. அங்கு நிலை கொண்டிருந்த சிங்களப் படைகள் போட்ட கழிவுகளை, மதுபானப் போத்தல்களை எல்லாம் மக்கள் துயிலும் இல்லத்தை விட்டு அகற்றினார்கள்.

கல்லறைகளை சிங்கள அரச படைகள் எப்படி சிதைத்துப் போட்டுள்ளனர்? என்று ஏங்கினார்கள் மக்கள். எனது அண்ணாவின் கல்லறை எஞ்சியிராதா? எனது தங்கையின் கல்லறை எஞ்சியிராதா? என்று தேடியபடி சிரமதானம் செய்தவர்களில் ஒருவர் தன் தங்கையின் கல்லறையைக் கண்டு பிடித்தார்.

எல்லாம் அழிந்து காணப்பட்ட துயிலும் இல்லத்தில் சிலர் இங்குதான் என் உறவு விதைக்கப்பட்டுள்ளார் எனக் கூறி அழுது புரண்டனர்.

ஒரு சில கல்லறைகளே சிங்களப் படைகளின் அழிப்புப் போரில் தப்பின. காடுகள் அழிக்கப்பட்டு துயிலும் இல்லத்திற்கு வெளியில் கொண்டு சென்று அழிக்கப்பட்டன.

அத்துடன் சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்ட கல்லறை துண்டுகளை சேகரித்து அதிலேயே மாவீரர் நினைவுத் தூபி ஒன்றும் செய்யப்பட்டது.

சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது புலனாய்வாளர்கள் வந்தனர். “எங்கடை உறவுகளுக்கு விளக்கு வைக்கப் போறம்..வேற ஒண்டும் நாங்கள் செய்யேல்லை…”அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லியபோது அவர்கள் எதுவும் செய்ய முடியாமல்இடத்தை விட்டு நகர்ந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வழிநடத்தலில் தமிழரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் ஒருங்கிணைப்பில் அறிவக இளைஞர்கள் துயிலும் இல்ல மீளமைப்பு பணியை துரிதமாக முன்னெடுத்தனர்.

அத்துடன் கிளிநொச்சி துயிலும் இல்ல சிரமதானத்தை தொடங்கிய மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மதியத்தின் பின் முழங்காவில் துயிலும் இல்லத்தில் சிரமதானம் செய்ய ஒரு தொகுதி இளைஞர்களுடன் சென்றார்.

கிளிநொச்சி துயிலும் இல்லப் புனரமைப்புப் பணி பற்றிய செய்தி முழங்காவில் மக்களையும் எழுச்சியடைய வைத்தது. அவர்களும் துயிலும் இல்லத்தை சிரமதானப்படுத்த திரண்டனர்.

அத்துடன் உடுத்துறை, வவுனியாக்குளம், ஆண்டான்குளம் துயிலும் இல்லங்களிலும் சிரமதானம் தொடங்கின. மாவீரர் துயிலும் இல்ல வாசல் வளைவுக்கான வடிவமைப்புக்காக கரைச்சிப் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வடிவேல் நகுலன் தலைமையில் இளைஞர்கள் வர்த்தகர்களிடம் பொருட்கள் சேகரித்தனர்.

வர்த்தகர்கள் கேட்பதற்கு முன்னரே உதவிக்கரம் நீட்டினர். இரண்டாவது நாள் மேலும் மக்கள் அதிகரிக்க மூன்றாவது நாள், அதாவது மாவீரர் நாளன்று மேலும் மக்கள் அதிகமாக முன்வந்து மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுப் பணிகளில் ஈடுபட்டனர்.

எங்கள் மக்களின் கனவு மண்ணாக இருந்த துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்து மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு உகந்த வகையில் நிகழ்வுகள் யாவும் பலநூற்றுக்கணக்கான இளைஞர்களின் உத்வேக பணியுடன் முன்னெடுக்கப்பட்டன.

ஒற்றுமையும் அக்கறையும் ஈர்ப்பும் நிறைந்து கடமையாற்றிய இளைஞர்களால்தான், மக்களால்தான் வெகுநாளில் இப்படி ஒரு நிகழ்வை நடத்த முடிந்தது. நவம்பர் 27 மாவீரர் நாளன்று எங்கள் விடுதலை வீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்ற தயாராகியது கனகபுரம் துயிலும் இல்லம்.

மதியம் மூன்று மணிக்குப் பின்னர் மக்கள் அலை அலையாக வரத் தொடங்கினார்கள். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு மக்கள் துயிலும் இல்லங்களை நோக்கிவருவார்களோ அவ்வாறே வரத் தொடங்கினார்கள்.

மக்களின் கண்களின் கண்ணீர். முகங்களில் ஏக்கம். எங்கள் விடுதலை வீரர்களின் கல்லறைகளை தொட்டு அழ, அவர்கள் விதைக்கப்பட்ட நிலத்தில் விழுந்து ஓடோடி வந்த தாய்மார்களால் கனகபுரம் வீதி நிறைந்தது.

விளக்கேற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் மக்கள் நிலைகொண்டனர். கொண்டு வந்த உணவுகளை பிள்ளைகளுக்குப் படைத்தனர். சாம்பிராணிப் புகை மணம் கமல எங்கள் விடுதலை வீரர்கள் உறங்கும் ஆலயம் தாய்மாரின் ஏக்கம் நிறைந்த மூச்சால் வழிந்தது.

மாலை நான்கரை மணிக்கு மாவீரர்களின் நினைவுகளைக் கிளறும் பாடல்கள் நெஞ்சை உருக்கத் தொடங்கியபோது பலர் அழுது உருகத் தொடங்கினார்கள்.

நேரம் நெருங்க நெஞ்சு அவர் நினைவால் வழிந்தது. மாலை ஆறு மணி மூன்று நிமிடத்திற்கு மணியோசை எழுப்பப்பட்டது. ஆறுமணி ஐந்து நிமிடத்திற்கு பொதுச் சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்றி வைக்க மக்கள் தம் வீர உறவுகளுக்கு சுடரேற்றினர்.

ஏழு ஆண்டுகளின் பின்னர் எரிந்தன விளக்குகள். விலாசி எரிந்தன தீ நாக்குகள். “தாயகக்கனவுடன் சாவினைத் தழுவி சந்தனப் பேழைகளே….” என்ற மாவீரர் துயிலும்இல்லப் பாடல் தொடங்கியது. அப் பாடல் எங்கள் வீரர்களின் நினைவுடன் இரண்டறக்கலக்கச் செய்தது.

எம் விடுதலை வீரர்களின் முகமாய், எங்கள் மாவீரர்களின் தாகமாய், எரிந்த விளக்குகளின் முன்னே எங்கள் மக்கள் உருகியுருகி அஞ்சலி செலுத்தினர்.

சரித்திரமான எங்கள் வீரர்களின் நினைவில் விடுதலைக் காவியமான எங்கள் வீரர்களின் நினைவில் கலந்தனர் மக்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறு என்று கூறி எங்கள்மீது இனப்படுகொலை செய்ய இலங்கை அரசுக்கு மாத்திரமல்ல, எம் மீதான போரை ஆதரித்த அத்தனை நாடுகளுக்கும் எங்கள் மக்கள் அறிவித்த செய்தி வலியது.

எங்கள் தெய்வங்களாய், எங்கள் நம்பிக்கையாய், எங்கள் காவலாய், எங்கள் விடுதலைக் குரலாய் எங்கள் மாவீரர்கள் இருக்கிறார்கள் என்பதை எம் மக்கள் மிக உறுதியாய் உலகிற்கு அறிவித்த நாளே 2016 நவம்பர் 27.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com