Breaking News
Home / சிறப்புப்பதிவுகள் / பிரபாகரனை புகழ்ந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரி!

பிரபாகரனை புகழ்ந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரி!

thalaivarநான் மேயர் அல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொன்று விட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; இலட்சியமும் வேறு” என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

மகனின் வார்த்தையைக் கேட்ட அந்தப் பெற்றோரோ அதிர்ச்சியில் உறைந்து போயினர்.இருக்காதா பின்னே….? வீட்டின் செல்லக்குட்டியும் கடைக்குட்டியுமான அந்த இளைஞனிடம் இருந்து அப்படியொரு முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லையே!

கடந்த சில மாதங்களாகவே அவனது நடவடிக்கைகளில் நிறைய மாற்றம். மக்கள் நலன், சுதந்திரம் என எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தான். வீடு தேடி வந்த பெரும் காவல்படையோ, ”எங்கே உங்கள் மகன்? அவன் வீட்டுக்கு வந்தால் எங்களிடம் மரியாதையாக ஒப்படைத்து விடுங்கள்” என்று மிரட்டினர்.

நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை என்னவென்று ஊகிக்க முடியாத நிலையில் இருந்த பெற்றோர் முன் அப்படியொரு தீர்க்கமான முடிவை உதிர்த்த அந்த இளைஞன்தான் பின்னாட்களில், ‘தமிழீழ தேசிய தலைவர்’ என உலகத்தாரால் போற்றிப் புகழப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன்!

அவரது பிறந்த தினம் நாளை!.1954-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன்.

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த மாவீரனாக பிரபாகரன் உருவெடுத்ததற்கான ஆரம்ப விதை அவரது சிறுவயது பிராயத்தில் நிகழ்ந்தது.

ஒரு இராணுவ வீரன், ஒரு முதியவரை இரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம் ”ஏன்? இப்படி துன்புறுத்துகிறார்?” என்று கேட்டார்.

அவரது தந்தையோ, ”நாம் ஒன்றும் செய்ய முடியாது? நம்மிடம் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களிடமோ இராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது” என்றார்.

உடனே பிரபாகரன், “இதே இராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன்” என்றார் சட்டென்று. சொன்னது போலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கி உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார்.

தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் வரலாற்றுத் தடங்கள் சில…விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த காலத்தில், ஒரு வேதியியல் பொறியியலாளர் பிரபாகரனைச் சந்தித்து “நீங்கள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளில் மயக்க மருந்தையும் கலந்து வெடிக்கச் செய்தால், எதிரிகள் இறப்பதோடு மட்டுமல்லாமல், தப்பித்துச் செல்ல நினைக்கும் எதிரிகளும் மயக்கம் அடைந்து விடுவார்கள். இதனால், நாம் அனைத்து எதிரிகளையும் மிக எளிதாக அழிக்கலாம்” என்று ஆலோசனை தந்தார்.

இதனைக் கேட்டு கடும் கோபம் கொண்ட பிரபாகரன், ”இது கோழையின் செயல். நேருக்கு நேர் நின்று எதிரிகளோடு சண்டையிடுபவர்கள்தான் விடுதலைப் புலிகள். இது உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. யுத்த நியதிகளை புலிகள் ஒருபோதும் மீறமாட்டார்கள்” என்று உறுதியாகப் பதிலுரைத்தார்.

கட்டுநாயக்க பன்னாட்டு விமான தளத்தோடு இணைந்தே இலங்கை விமானப் படைத் தளமும் இருந்தது. 2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதியன்று இந்த விமான தளத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த விமான தளத்துக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரபாகரன், ”பயணிகளில் ஒருவருக்குக்கூட எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய பின்புதான் தாக்குதல் நடத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார். அதன் பின் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றியும் பெற்றார்.

தமிழகத்தில் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதி ரகு, பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழகத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்த்தார். ”போலீஸ் சோதனைகள் நிறைய இருந்திருக்குமே…. எப்படித் தப்பித்து வந்தாய்?” எனக் கேட்டார் பிரபாகரன்.

“நம்முடைய ஆயுத வாகனத்தை அம்புலன்ஸ் வாகனம் போல் மாற்றி அமைத்து கொண்டு வந்தேன்” எனக் கூறினார். சட்டென கோபமடைந்த பிரபாகரன், ”அம்புலன்ஸ் என்பது மனிதர்களின் உயிரைக் காக்கும் வாகனம். புனிதமான அந்த வாகன சின்னத்தைப் பயன்படுத்தி ஆயுதங்களை ஏன் எடுத்து வந்தாய்? இதுமாதிரி செயல்களுக்கு இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்” என்று கடுமையாக எச்சரித்தார்.

இறுதிகட்டப் போரில், பிரபாகரனோடு நேருக்கு நேர் யுத்தம் புரிந்த இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பிரபாகரனைப் பற்றிக் கூறிய வரிகள் இவை :

“பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்தே வாழ்ந்து வந்தார். பெண்களுக்கு மரியாதையையும்,பாதுகாப்பையும் கொடுத்தவர். அவர் ஒரு இயக்கத்தின் தலைவனாக இருந்த போதும் அன்பான குடும்ப மனிதராக இருந்தார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றினர். அவற்றில் ஒரு புகைப்படத்தில் கூட, மதுக் கோப்பையுடனோ அல்லது சிகரெட் பிடித்த நிலையிலோ பிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லை. அவர் ஒரு ஒழுக்கமானத் தலைவராக இருந்தார். அனைவரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன.” என்றார்.

ஒழுக்கமற்றக் காரியங்களையோ, குறுக்குவழி சதி செயல்களையோ விரும்பாதவர் பிரபாகரன். ஆனால், அந்த மாவீரனுக்கு உலக நாடுகள் செய்தது என்னவோ சதியைத் தவிர வேறொன்றும் இல்லை.

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், பிரபாகரன் கூறிய பதில் மிகவும் பிரசித்தி பெற்றது. “இந்தியாவில் நீங்கள் அமைதி போராட்டம் செய்து வெற்றி கண்டீர்கள், அப்படி இருக்க இலங்கையில் மட்டும் ஏன் ஆயுதம் ஏந்திப் போராடுகிறீர்கள்?” என நிருபர் ஒருவர் கேட்க… பிரபாகரன் அளித்த பதில் இது…

“இந்தியா அமைதியை மதிக்கும் ஒரு நாடு. அதனால் அங்கு அஹிம்சை ஆயுதம் ஏந்திப் போராடினேன். ஆனால், இலங்கையோ அஹிம்சையை மதிக்காத சர்வாதிகார நாடு. நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்தனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com