Breaking News
Home / சிறப்புப் பக்கம் / ஒரு தமிழனுக்காக காலம் இருந்த தவத்திற்கு கிடைத்த வரமே பாரதி(தீ)

ஒரு தமிழனுக்காக காலம் இருந்த தவத்திற்கு கிடைத்த வரமே பாரதி(தீ)

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமும் இன்றி

வஞ்சனை சொல்வாரடீ – கிளியே!

வாய்ச்சொல்லில் வீரரடி!

கூட்டத்தில் கூடி நின்று பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளாரடி – கிளியே

நாளில் மறப்பாரடீ…!

இந்த வரிகளுக்கு சொந்தக்காரன் பாரதி, இன்று பாரதியின் 95ஆவது நினைவுநாள், வாழும்போது கவனிக்க மறந்த உலகம் இவன்போன பிறகு மஹாகவியாக்கியது. இது ஒரு கவிஞனின் ஆதங்கம்.

தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி மனிதனுக்குள் இருக்கும் விடுதலை உணர்வை தன் வரிகளால் தட்டி எழுப்பியவன் பாரதி.

1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார்.

“மஹாகவி” காலத்தால் உருவாக்கப்பட்ட கவிஞன் அல்ல. காலத்தையே உருவாக்கிய கவிஞன். கம்பனுக்குப் பிறகு எட்டு நூற்றாண்டுகள் ஒரு தமிழனுக்காக காத்திருந்தது காலம். அவ்வாறு காலம் இருந்த தவத்திற்கு தமிழுக்கு கிடைத்த ஒரு வரமே பாரதி.

வரலாற்றிலேயே முதன்முதலாக இந்தியா மட்டுமல்ல நம் தமிழும் அடிமைப்பட்டிருப்பதை உணர்த்தி மொழி விடுதலைக்காக போராடினார் பாரதி.

வளர்ந்துவரும் அறிவியலை தமிழில் கூறமுடியுமா என்ற மெத்த படித்த இளைஞர்களின் கூற்றைக் கேட்டு பொங்கி எழுந்தான் பாரதி. அப்போது பிறந்ததுதான் “இன்றொரு சொல்லினைக் கேட்டேன். இனி என்ன செய்வேன் மக்கா?” என்ற வரிகள்.

தமிழ் மொழியை வாழ்வின் கருவியாக, போராட்டத்தின் கருவியாக, முன்னேற்றத்தின் கருவியாக, நிகழ்காலத்தின் கருவியாக, மனிதகுல மேம்பாட்டுக்கான கருவியாக தமிழை பயன்படுத்தியவன் பாரதி என்றால் அது மிகையல்ல.

ஒரு மஹா கவி வாழுகின்ற போது மதிக்கப்படுவதில்லை, அவன் மறைந்த பிறகு துதிக்கப்படுகின்றான். மதிக்கப்படாத கவிஞன் எப்போது துதிக்கப்படுகின்றானோ அப்போது அவன் மஹாகவியாகின்றான்.

இந்த மஹாகவியின் இறுதி ஊர்வலத்தில் அவரை சுமந்து சென்றவர்கள் நால்வர், இருபது பேர் கூட ஊர்வலத்தில் இல்லை. கவி உனது உடலில் மொய்த்த ஈக்களின் அளவுகூட மனிதர்கள் வரவில்லை என்பதை பாரதியின் வாழ்க்கை வரலாற்றை புதிய வடிவில் எழுதிய வைரமுத்து “கவிராஜன்” கதையில் காணக்கூடியதாக உள்ளது.

பாரதியின் காதல் கவிதைகள், நாட்டுப்பற்று கவிதைகள் அதிகம், தேசபக்திக்கு தீவைத்துக் காட்டியவன் பாரதி, காதலுக்குள் பெண்ணுரிமையை புகுத்தியவன் பாரதி.

1921ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார்.

பிறகு 1921 செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு மரணமடைந்தார். யானை மிதித்து இறந்ததாகத் தகவல்கள் இருந்தாலும், நோய்வாய்ப்பட்டு இறந்ததே உண்மை. அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது. பாரதி இந்த உலகை விட்டுச் சென்று இன்றுடன் 95 வருடங்கள். பாரதி உண் புகழ் வாழ்க. இன்னும் பல யுகங்கள் கடந்தாலும் நீ நிலைத்து நிற்பாய் ஒவ்வொரு பெண்ணின் வெற்றியிலும்!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com