Breaking News
Home / பிரதான செய்திகள் / சிலைவிதைப்பும் சிதைப்பும் நல்லாட்சியாம்! மூன் இந்த நாட்டில் எப்படி நல்லிணக்கத்தை கொண்டு வரப்போகின்றார்?

சிலைவிதைப்பும் சிதைப்பும் நல்லாட்சியாம்! மூன் இந்த நாட்டில் எப்படி நல்லிணக்கத்தை கொண்டு வரப்போகின்றார்?

625.167.560.350.160.300.053.800.300.160.90ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஜயத்தின் போது “இராணுவத்தை குறையுங்கள் காணிகளை விடுவியுங்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரி அதனை செய்ய சற்று கால அவகாசம் தேவை என தகவல்கள் வெளியிட்டிருந்தார். இவை நாட்டில் நிலையான சமாதானம் .நல்லிணக்க ஏற்பாட்டிற்கு மிகமுக்கியமானவையாகவுள்ளன. என்ற அடிப்படையிலேயே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இது ஒரு நல்ல சமிஞ்சை தானே, ஏன் நாம் ஆத்திரப்படுவான் என்ற தொனியில் சிலர் பேசுவதும் பலரது காதுகளில் விழுகின்றது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் பலர் செவிமெடுக்காதமையினால் “கால அவகாசம்” என்பது விட்ட காணிகளை பிடிக்கவா? என்று தமிழ் மக்கள் சார்பிலும் புத்திஜீவிகள் சார்பிலும் தற்போது பலமாகவுள்ள கேள்வியாகும்.

அரசின் எதிர்தரப்பினரின் அடாவடித்தங்களும் அத்துமீறல்களும் தான் இதற்கு காரணம் என்றாலும் நல்லிணக்கத்திற்கு சவால் விடும் அடாத்துக்காரர்களை கட்டுப்படுத்தாமை தவறை சுட்டிக்காட்டாமை என்பது பெரும் தவறாக மாறி வருகின்றது.

பான்கீ மூன் ஈழத்தில் பாரிய அழிவை செய்ய காரணமாக அமைந்து விட்டு பகிரங்கமான அழிவுக்கு ஐ.நாவும் காரணமாகி விட்டது என பகிரங்கமாக கூறுவது, அழிந்து மற்றும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான உயிர்களை திரும்ப மீட்டுக்கொடுப்பது அல்ல அப்படி வந்து விடவும் மாட்டாது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டம் ”சிதைக்கப்படும் மாவட்டமாகவும் சிலை விதைக்கப்படும்” மாவட்டமாகவும் ஆட்சியாளர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ என்னவோ?

கடந்த 1958ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து துடங்கிய இந்த சிலைவிதைப்பும் சிதைப்பும் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் நிற்காது கடுகிதியாய் தொடர்கிறது.

மேலும் தொடர்வதற்காகவா ஜனாதிபதியின் கால அவகாசம் என பலரும் தற்போது கேட்க துவங்கி விட்டனர்.

அதுவும் சமாதானம் நல்லிணங்கம் புரிந்துணர்வு என்று பேசிக் கொண்டு அதற்கான எதிர் தமிழ் தலைமையையும் இந்த மாவட்டத்திலேயே வைத்தக் கொண்டு மிக இலாவகமாக செய்யப்படும் காரியம் தான் என ஏன் சொல்ல முடியாது?

பான் கீ மூன் படையினர் காணியை விடுவியுங்கள் எனச்சொல்லியுள்ளார். பல மாதங்களாக அரசும் நல்லிணக்க நடவடிக்கையாக விடுவது மாதிரி காட்டி விட்டும் வருகின்றது.

அவ்வாறு விடப்பட்டது தான் சாம்பல்தீவு இராணுவ முகாம் நிலையம் . தற்போது அங்கு என்ன நடக்கின்றது படையினர் விட தயாராக பார்த்திருந்த குழுவினர் சாட்டுக்களைக்கூறி அல்லது சாட்டுக்களை ஏற்படுத்தி சிலையே இல்லாத இடத்தில் நிலையாக சிலையையும் வைத்து படையினர் போக பொலிஸாரை மறைமுகமாக நிறுத்தியுள்ளனர்.

இதனைத் தடுக்கவோ? தேவையில்லாத இடத்து சிலையை அகற்றவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதுமட்டுமன்றி திருகோணமலையில் உலக தமிழர்களின் இந்துக்களின் கவனத்தை ஈர்க்கும் விடயம் திருக்கோணேஸ்வரமாகும்.

இந்தஆலயத்தில் வரலாறு சம்பந்தர் தேவாரம் பாடியதால் 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனக்கொள்ளலாம்.

ஆனால் அதற்கு முற்பட்ட இராவண வரலாற்றையும் அது கொண்டிருக்கின்றது. என்பது மூடிமறைக்கத்தக்க விடயமல்ல. அங்கு இந்த நல்லாட்சியில் என்ன நடந்திருக்கிறது.?

சுமார் 60 மேற்பட்ட வெளி மாட்டங்களைச்சார்ந்த சிங்கள அடாத்துக்காரர்கள் கடந்த மகிந்த ஆட்சியில் அழைத்து வரப்பட்டு ஆலயத்திற்கும் அன்னதான மடத்திற்குமிடையில் அத்துமீறிய வகையில் கடைகளை நிறுவி வழியையும் கலாச்சார பண்பாட்டையும் கேள்விக்குறியாக்கியிருந்தனர்.

இந்த ஆட்சியில் அவர்கள் அத்துமீறல்காரர்கள் நிச்சயம் அகற்றப்படுவார்கள் என பலரும் எதிர்பார்த்தனர் ஏன் ஜனாதிபதி கோணேஸ்வரம் வந்தபோது ஆலய நிர்வாகம் அதனைச் சுட்டிக்காட்டி நாசுக்காக தெளிவுபடுத்தியது.

ஆனால் என்ன நடந்தது. நல்லாட்சியில் கடந்த மாதத்தில் சுமார் 54 கடைகளுக்கு அரைநிரந்தர அந்தஸ்து திட்டமிட்ட வகையில் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இன்னும் அன்னதான மடம் திருத்த அனுமதியின்றி நிர்வாகம் அலைகிறது.

இது அடாத்துக்காரர்களுக்கு அரச நிர்வாகம் வழங்கியமையானது அடாத்திற்கு அங்கீகாரமில்லையா? இதற்கு மத நல்லிணக்கம் என தமிழ் தலைமைகள் கொள்கிறதா?

மகிந்த அரசுதான் இறுதி யுத்தம் கிழக்கில் 01.08.2006 அன்று ஆரம்பித்தபோது மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு ஒரு சில மாதங்களில் மக்கள் கிராமங்களுக்குள் வராத நிலையில் வெருகல் இலங்கைத்துறை முகத்துவார முருகன் ஆலயம் அகற்றப்பட்டு மலைக்காணி அபகரித்து விகாரை அமைத்தமை, மலை நீலியம்மன் ஆலயம் சிதைக்கப்பட்டு 10 ஏக்கருக்கு மேல் உள்ள மலைக்காணி பறித்தெடுத்து விகாரை அமைத்தமையில் ஆரம்பித்து திரியாய் விகாரைக்கு முவாயிரம் ஏக்கர் அரச காணி ஒதுக்கீடு அடங்கலான பௌத்த அபிவிருத்தியைக் கண்ட தமிழ் பேசும் மக்கள் நல்லிணக்கம் என்பதனை உணர்வார்களா?

அத்துடன் நின்றதா? புல்மோட்டை அரிசிமலை ,தென்னமரவாடி சுவாமி மலை, வயல்காணி, மூதுார் அகஸ்தியர் ஸ்தாபான சிவன் ஆலயம் அதனுடன் கூடிய காணி அபகரிப்பு வன இலாகாக்கள், தொல்பொருளாலர்கள் விஷேடமாக இராவணன் தன்தாய்க்கு ஏற்படுத்திய கன்னியா வென்னூர் ஊற்றின் நிலை என்ன என நுாற்றுக்கணக்கான சம்பவங்களை அடுக்கிகொண்டே போகலாம்.

இந்த வகையில் எதிர்கட்சித்தலைமையை தமிழ் தலைமையிடம் வழங்கி அதன் தலையிலே கையை வைப்பது போன்று திருகோணமலை மாவட்டத்தையே பின்புறத்தில் சிதைத்து வருவது பான் கீ மூன் அறிவாரா?

இவ்வாறே வடகிழக்கு எங்கும் காணிவிடுவிப்பும் சிலைவைப்பு என்ற போர்வையில் காணி பிடிப்பும் நிகழ்கிறது.

மதவிவகாரம் என்பது எழிதில் மக்களின் மனங்களை சென்றடைய வல்லது. மிகவும் கூர்மையான விடயமாகும் மனதை சிதைத்து விட்டு எவ்வாறு பான் கீ மூன் உட்பட்ட தலைவர்கள் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை கொண்டு வரப்போகின்றார்கள்.

இன்னும் சில வருடங்களின் பின்னர் வந்து எமது அணுகுமுறையில் நாம் தவற விட்டு விட்டோம் எனச் சொல்ல பான் கீ மூனும் இருக்கப்போவதில்லை. என பலரும் கூறுகின்றனர்.

ஈழத்தை நிறுத்துகிறோம் என்று சொல்லி கிடைப்பதையெல்லாம் சுருட்டும் நிவமை தொடர்வதனை தடுக்காத நல்லாட்சி அரசு என்ற பெயரை எடுக்க காலம் இல்லைபோல், எனவே ஐ.நா இந்த விடயத்தில் விழிப்புடன் இருக்கவேண்டும் ஏமாற்றப்படுவதே தொழிலாக கொண்ட தமிழ் தலைவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com