Breaking News
Home / புலனாய்வு / இன்னமும் தொடர்கிறதா சர்வதேச புலனாய்வுச் சதி?

இன்னமும் தொடர்கிறதா சர்வதேச புலனாய்வுச் சதி?

பிரான்சின் நீஸ் நகரில் கடந்த மாதம் 15ம் திகதி பாஸ்ரில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது ஐஎஸ். தீவிரவாதி ஒருவர் மக்கள் கூட்டத்துக்குள் தாறுமாறாக கொள்கலன் வாகனமொன்றைச் செலுத்தி தாக்குதல் நடத்தியிருந்தார்.

84 பேரைப் பலிகொண்ட நூற்றுக்கு மேற்பட்டோரை காயப்படுத்திய இந்தத் தாக்குதல், ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை மட்டும் தான் தீவிரவாத நடவடிக்கைகளாக உலகம் கருதிக் கொண்டிருந்த காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்தியிருக்கிறது.

தீவிரவாதத் தாக்குதல்கள் புதிய வடிவங்களை எடுக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதன் அடையாளம் தான் இந்தச் சம்பவம். இதற்குப் பின்னர் ஜேர்மனியிலும், லண்டனிலும் வாள்கள், கோடரிகளைக் கொண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

மேற்குலகை அச்சுறுத்தும் இலக்குடன், நடத்தபக்படும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு புதிய ஆயுதங்களை தீவிரவாத அமைப்புகள் தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன.

நீஸ் தாக்குதல் தொடர்பாக ஹொங்ஹொங் மற்றும் சீனாவில் இருந்து வெளியாகும் தி ஸ்ரான்டட் என்ற நாளிதழ் ஒன்று ஒரு விசமத்தனமான செய்தியை வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தி எத்தனை பேரின் கண்களில் பட்டிருக்குமோ தெரியாது. ஆனால் அது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

இலங்கை தமிழ்த் தீவிரவாதிகளின் உத்தியைப் போன்ற ட்ரக் தாக்குதல் என்று அந்தச் செய்தியின் தலைப்பு அமைந்திருக்கிறது. அந்தச் செய்தியில் முதலாவது வசனம் மாத்திரமே நீஸில் இடம்பெற்ற தாக்குதல் பற்றிக் கூறப்பட்டிருந்தது.

நீஸில் ட்ரக்கைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் வழமைக்கு மாறானதல்ல என்றாலும் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் அந்த முதல் வசனம்.

அதற்கு அப்பால் முற்றிலும் அந்தச் செய்தி இலங்கையில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பிரான்சில் வசிக்கும் தமிழர்கள் பற்றிப் பீதியூட்டும் கருத்துக்களைத் தான் கொண்டிருந்தது.

இலங்கையில் தற்போது அழிக்கப்பட்டுள்ள தமிழப் புலிகள் தீவிரவாதக் குழு, தீவிரவாத தாக்குதல்களுக்கு ட்ரக் குண்டுகளைப் பயன்படுத்தியது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டுள்ள தமிழ்த் தீவிரவாதக் குண்டுகள் நிரப்பிய ஒரு ட்ரக் வண்டியைப் பயன்படுத்தி 10 மாடி இலங்கை மத்திய வங்கிக் கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி அப்பாவிகளைக் கொன்றதுடன் கட்டிடத்தையும் சேதப்படுத்தியது.

காவலர் ஒருவரை சாரதி மோதித் தள்ளிக் கொண்டு கட்டிடத்தின் அடித்தளப் பகுதிக்கு ஆழமாக ட்ரக்கைச் செலுத்தி தாக்குதல் நடத்தினார். 90ற்கும் மேற்பட்டோர் இதில் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ட்ரக்கில் தாக்குதலாளிகளும் இருந்தனர். அவர்கள் அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இராணுவத்தின் கண்காணிப்புக்கு அகப்படாத வகையில் கொழும்புக்கு கொண்டு செல்லப்படவிருந்த ட்ரக் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கிலோ வெடிபொருளை பாதுகாப்புப் படைகள் கைப்பற்றின.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த மூன்று தசாப்த கால தீவிரவாதப் போராட்டத்தின் போது பல தமிழப் புலிகள் பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். பல புலிகள் இன்னமும் பிரான்சில் அகதிகள் என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதுதான் அந்தச் செய்தியின் தமிழாக்கம் இந்தச் செய்தியின் ஊடாக பல்வேறு விதங்களில் தமிழர்கள் பற்றிய மோசமான எண்ணப்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

நீஸ் தாக்குதலுக்கும் பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களுக்கும் முடிச்சுப் போடும் முயற்சியாக மட்டும் இது அமையவில்லை. விடுதலைப் புலிகள் ட்ரக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர் என்பது உண்மை. அவை பெரும்பாலும் இராணுவ பொருளாதார இலக்குகளை நோக்கி நடத்தப்பட்டன. எனினும் சில விதிவிலக்கான தாக்குதல்கள் இடம்பெற்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதேவேளை கொழும்பில் நடத்தப்பட்ட எல்லாத் தாக்குதல்களுமே விடுதலைப் புலிகளால் தான் நடத்தப்பட்டவை என்று கூறவும் முடியாது.

புலனாய்வுப் போர் ஒன்றில் தமது இலக்குகளைத் தாமே தாக்கும் உத்தி பயன்படுத்தப்படுவது வழக்கம். அத்தகைய சம்பவங்களும் இலங்கையில் போர் நடந்த காலத்தில் இடம்பெற்றிருப்பதாக அண்மைக்காலத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு போலி நடவடிக்கை என்ற செய்திகளும் அண்மையில் வெளியாகியிருந்தன.

எனவே கொழும்பில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் புலினால் தான் நடத்தப்பட்டன என்ற முடிவுக்கு வருவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.

இருந்தாலும் புலிகளால் நடத்தப்பட்டிருப்பினும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருப்பினும் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட எந்தத் தாக்குதலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

நீஸ் தாக்குதல் என்பது அப்பட்டமாக பொதுமக்களைக் கொல்ல வேண்டும் என்று நடத்தப்பட்ட ஒன்று கொழும்பில் புலிகளால் அத்தகைய இலக்குடன் ட்ரக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. என்று கூற முடியாது அவ்வகையான இலக்குடன் புலிகள் செயற்பட்டிருந்தால் ஏராளமான தாக்குதல்களை அவர்களால் நடத்தியிருக்க முடியும்.

நீஸ் தாக்குதல் ஆட்களை மோதிக் கொல்லும் வகையானது புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள், குண்டுத் தாக்குதல்கள் இரண்டுமே வேறுபட்டவை.

உலகிலேயே புலிகள் மட்டும் தான் ட்ரக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினார்கள் என்பது போன்று தி ஸ்ரான்டட் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

புலிகளுக்கு முன்னதாகவே லெபனான் மற்றும் வேறு நாடுகளில் இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெற்று வந்தன. அவையெல்லாம் தி ஸ்ரான்டட் நாளிதழுக்கு நினைவுக்கு வரவில்லை. தமிழ்ப் புலிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மட்டுமே நினைவுக்கு வந்திருப்பது சாதாரணமான விடயமல்ல.

அதைவிட இந்த தாக்குதல்கள் இரண்டையும் ஒப்பிடுவதற்கான தேவையோ காரணமோ இருக்கவுமில்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட இதுபோன்ற ஒப்பீடு செய்யப்படவில்லை.

அடுத்து பிரான்சில் இன்னமும் புலிகள் அகதிகள் என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருப்பது அங்குள்ள புலிகளுக்கும் நீஸ் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என்ற கருத்தை ஏஏற்படுத்துவதாகவே அது அமைந்திருந்தது.

பிரான்சில் அகதிகளாக அடைக்கலம் தேடிச் சென்று வசிக்கும் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஒரு உள்நோக்கத்தையும் இந்தச் செய்தியில் காண முடிகிறது.

இதுவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இலங்கையில் நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளியான செய்தியாக இருந்தால் அதற்குப் பின்னால் ஒரு நேரடியான நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இலங்கை அரசின் புலனாய்வு அமைப்புகள் உலகின் பல்வேறு நாடுகளில் இத்தகைய கருத்துக்களை ஏற்படுத்துவதற்காக தீவிரமாகச் செயற்பட்டிருந்தன.

ஆனால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவிலும், ஹொங்ஹொங்கிலும் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழில் இவ்வாறு வெளியான செய்தி நீஸ் தாக்குதலின் கோரத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகத் தெரியவில்லை.

அதற்கு அப்பால் தமிழர்களைப் பற்றி மோசமான ஒரு படத்தை காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளாகவே தெரிகிறது. இந்தக் கருத்து தி ஸ்ரான்டட் நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உள்ளவர்களால் எழுதப்பட்டதா அல்லது வேறு எவரினதும் தூண்டுதல்களின் பேரில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை.

ஆனால் உலகெங்கும்பரந்துவாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது அவதானமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

தமிழர்களுக்கு தவறான அடையாளம் ஒன்றைக்காட்டி அவர்களை ஓரம் கட்டும் ஒரு அரசியல் புலனாய்வுச் சதி இன்னமும் தொடர்கிறதா என்ற சந்தேகத்தைத் தான் இது ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com