Breaking News
Home / சிறப்புப் பக்கம் / இரண்டாம் முள்ளிவாய்க்கால்-09

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-09

ஓரு கொடிய ஒடுக்குமுறை மூலம் ஒரு விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்கலாம்.ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவரமுடியாது.

இது ஒரு யதார்த்தமான உண்மை.அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் இருக்கும் வரை அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்.ஒரு விடுதலைப்போராட்டம் தனது இறுதி இலக்கை அடைவதற்கு முன் ஒரு போதும் முடிவுறாது.

விமர்சனத்துக்கும் அவதூறு பரப்புரைக்குமுள்ள வேறுபாட்டை இனங்காண்பது தொடர்பாக….

ஒரு விடுதலைப் போராட்டத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம் என்பது அந்தப் போராட்டத்தின் தவறுகளில் இருந்து படிப்பினைகளை பெறுவதற்கும் அவற்றின் மூலம் அந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்துவதற்கும் உந்து சக்தியாக இருக்கவேண்டும்.

எந்தவொரு விமர்சனமும் அந்த விமர்சனம் வைக்கும் காலகட்டத்துக்கான களநிலை யாதார்த்தம் மற்றும் அந்த யதார்த்தத்தின் மீது தாக்கம் செலுத்திய அகப் புறச் சூழ்நிலை என்பவற்றை கணக்கில் எடுத்தே வைக்கப்பட வேண்டும்.

ஒரு விடுதலைப்போராட்டத்தின் தோல்வியை அதற்கான காரணங்களை விமர்சிப்பதற்கு எல்லோருக்கும் உரிமையுள்ளது..ஆனால் அந்த உரிமை என்பது அந்த விடுதலைப் போராட்டத்தில் அதை விமர்சிப்பவரது பங்களிப்பு என்ன? அந்தத் தோல்வியை தடுப்பதற்கு அவர் செய்த முயற்சிகள் என்ன? என்கின்ற சுய விமர்சனத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேருக்கு வெந்நீர் ஊற்றும் வேலையை செய்வதற்குப் பெயர் விமர்சனமல்ல.அது அவதூறு பரப்புரை.இப்போது நிறையப் பேர் இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது.எல்லா தவறுகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைமையும் தான் காரணம்.இனி பௌத்த சிங்கள பேரினவாதிகள் போடும் பிச்சையை பெற்றுக்கொண்டு வாழ்வது ஒன்றுதான் வழி என்று பலர் போதித்;துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓரு கொடிய ஒடுக்குமுறை மூலம் ஒரு போராட்டத்தை தோற்கடிக்கலாம்.ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவரமுடியாது.இது ஒரு யதார்த்தமான உண்மை.அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் இருக்கும் வரை அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்.ஒரு விடுதலைப்போராட்டம் தனது இறுதி இலக்கை அடைவதற்கு முன் ஒரு போதும் முடிவுறாது.

யுத்தம் புரட்சியை முன்னுக்கு தள்ளும்.புரட்சி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்பது ஒரு புகழ் பெற்ற யுத்ததந்திரக் கூற்று.

இதன் அர்த்தம் யுத்தம் நடக்கின்ற போது புரட்சி வெடித்து அதை நிறுத்தும் என்பதல்ல.

எதிரி மக்கள் மீது திணிக்கும் ஒரு கொடிய யுத்தத்தின் மூலம் அவர்களது உடமைகளை அழிக்கலாம் அவயங்களை இழக்கம்படி செய்யலாம், உயிர்களை வகைதொகையின்றி பறிக்கலாம்.ஆனால் இவற்றின் மூலம் விடுதலை உணர்வை முற்று முழுதாக ஒழித்துவிட முடியாது.அது போர் காலத்திலும் அதையொட்டிய பின் போர் சூழலிலும் மழுங்கடிக்கப்பட்டது போலத் தோற்றமளிக்கும். ஆனால் அது அமைதியான தோற்றப்பாட்டை காண்பிக்கும் எரிமலைக்கு ஒப்பானது. அது உரிய நேரம் வரும் போது குமுறிக் கொந்தளித்து வெளிப்படும்.இது ஒரு இயங்கியல் விதி.இதை ஒடுக்குமுறையாளர்களாலும் அவர்களது ஒத்தோடிகளாலும் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியாது.

ஓரு கிரிக்கட்; போட்டியில் 4 ஓட்டங்கள் அடித்தால் கைதட்டல் 6 ஓட்டங்கள் அடித்தால் விசில் ஆட்டமிழந்தால் ‘இவங்களுக்கு விளையாடத்தெரியேல்லை’ என்று வர்ணனை செய்வதை போல விடுதலைப் போராட்டத்தையும் அதேபோன்ற ஒரு இரசிக மனோபாவத்தில் இருந்து ஆதரித்து வந்தவர்களுக்கும், விடுதலைப் போராட்டம் என்பதே சலுகைகளை பெறுவதற்கும் ஆட்சியில் பங்கு பெற்று அமைசசர் பதவிகள் உட்பட்ட அதிகாரப்பதவிகளை பெறுவதற்குமான ஒரு கருவியென நினைத்து செயற்பட்டவர்களுக்கும் இந்தத் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்டது போன்ற தோல்வி ஒரு நிரந்தரமான தோல்வியாகத் தோன்றும்.

ஆனால் தாயக விடுதலையை உண்மையாக நேசித்தவர்களுக்கும் அதற்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கும் இந்த தோல்வி என்பது நிரந்தரமானதல்ல என்பது தெரியும்.

ஓரு விடுதலைப் போராட்டத்தில் எந்தளவுக்கு எதிரி அடக்குமுறையை பிரயோகிக்கிறானோ அந்தளவுக்கு அதற்கு எதிராக போராட துணியும் போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.ஒடுக்குமுறைக்கு எதிராக போரிட்ட ஒரு சமூகம் ஒருபோதும் அடிமைத்தனத்தை நிரந்தரமாக ஏற்றுக்கொண்டு வாழாது. ஏற்கனவே அந்தச் சமூகம் தோற்றுப் ;போய்விட்டாலும் அந்தத் தோல்விகளில் இருந்து பாடங்கற்றுக் கொண்டு மீண்டும் வீறு கொண்டு எழும் என்பதே வரலாறு.

முள்ளிவாய்க்காலிலே நடந்த இந்த நூற்றான்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்துக்கு இனப்படுகொலைக்கு கண்கண்ட சாட்சிகளாக இருக்கும் இன்றைய குழந்தைகள், தங்களுடைய தாயை தந்தையை சகோதரியை சகோதரனை உறவுகளை துடிக்கத் துடிக்க கொன்ற சிறீலங்கா அரச கட்டமைப்பை தனது கட்டமைப்பென்றும் சிறீலங்கா தேசியத்தை தன்னுடைய தேசியம் என்றும் சிறீலங்காவின் வாளேந்திய சிங்கக் கொடிதான் தன்னுடைய தேசியச் கொடி என்றும் மனதார ஏற்றுக்கொண்டு அடிமை வாழ்வு வாழ்வார்கள் என்று எவராது நினைத்தால், அல்லது கூறினால், நிச்சயமாக அவர் விடுதலைப் போரின் அடிப்படையை புரியாத ஒருவராகத் தான் இருப்பார்.அல்லது பிழைப்பவாத சிந்தனை அல்லது மேலாதிக்க சிந்தனை கொண்ட ஒருவராகத்தான் இருப்பார்

உதாரணமாகசிறீலங்காவிலே 1971 ம் முதலாவது ஜேவிபி கலவரத்திலே அதை அடக்குவதற்காக இந்திய இராணுவத்தின் உதலியோடு பதினோராயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

1971 லே ஒடுக்கப்பட்டதாக சொன்ன ஜேவிபி 1988-89ல் மீண்டும் கிளர்ந்து எழுந்தது.அந்தக் கிளர்ச்சியை ஒடுக்க 30000 ஆயிரம் பேரைக் கொன்றார்கள். இந்தக்கிளர்ச்சியிலே முன்னணியில் நின்று செயற்ப்பட்டவர்கள் இதிலே கொல்லப்பட்டவர்கள் எல்லாம் 1971 கிளர்ச்சியின் போது படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களாகும்.

நிச்சயமாக இந்த முப்பதாயிரம் பேர்களின் குடும்பங்களிலும் இருந்து இன்னொரு 5 அல்லது 10 வருடங்களில் சாரசரியாக 90000 ஆயிரம் பேர் தங்களுக்கு அநீதி இழைத்த சிறீலங்காவின் அதிகார அமைப்பை தகர்க்க புறப்படுவார்கள்.இது சிறீலங்காவின் அதிகார வர்க்கத்துக்கு நன்கு தெரியும். இதனாலேயே அவர்கள் பௌத்த சிங்கள பேரினவாத வெறியை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிங்கள இளையோருக்கு ஊட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.முன்னெப்போதையும் விட அதிதீவிர சிங்கள இனவாத அமைப்புக்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன.

இதற்காகத் தான் தமிழின அழிப்பையும் போர் வெற்றியையும் சிங்கள தேசியத்தின் வெற்றியாக பிரகடனப்படுத்தி அவர்கள் இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எல்லா அடக்குமுறையாளர்களும் எல்லா அதிகாரவர்க்கமும் செய்யும் மரபுவழி தவறையே சிறீலங்காவின் அதிகார வர்க்கமும் செய்திருக்கிறது.

ஓரு போர் என்பது தோற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் வென்றவர்களுக்கும் எதிர்விளைவுகளை கொடுக்கக் கூடியது.வெளிப்படையாக பார்த்தால் சிங்கள இனமும் பௌத்த சிங்கள தேசியவாதமும் வென்றுவிட்டது, தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் தமிழ் தேசியம் தோற்றுப் போய்விட்டது என்பது போலத்தான் தெரியும்.

ஆனால் உண்மையில் தமிழ் தேசியத்தை தோற்கடிக்கப்புறப்பட்டு சிங்கள தேசியம் தான் தோற்றுப் போய்விட்டது.. சிங்கள தேசத்தின் இறைமை சீனவிடவுமும் இந்தியவிடமும் அமெரிக்காவிடவும் உலகவங்கியிடமும் அடகுவைக்கப்பட்டு விட்டது. சிறீலங்காவினுடைய சந்தையை சீனாவும் இந்தியாவும் பங்கு போட்டுக்கொள்ள சிறீலங்காவின் புவிசார் அசைவியக்கத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

தமிழர்கள் மீது சிறீலங்கா தொடுத்த போர் அந்த நாட்டை மிகப் பெரிய கடனாளியாக்கியிருக்கிறது.இந்தக் கடன்களுக்கான வட்டியை கட்டுவத்கு மேலும் கடன்வாங்க வேண்டிய நெருக்கடிக்கு சிறீலங்காவை தள்ளியுள்ளது.

சீனாவும் இந்தியாவும் அவ்வப்போது சிறீலங்காவுக்கு கொடுக்கும் நன்கொடைகள் மீன் பிடிப்பதற்கு தூண்டிலில் கொழுவும் இரைக்கு ஒப்பானது.

காப்பெற் வீதிகளும் தொடரூந்து பாதை புரரமைப்புக்களும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவுவதற்காக போடப்பட்டவையல்ல.இலங்கைத் தீவின் வளங்களை சுரண்டி அவற்றை விரைவாக வெளியே எடுத்துச் செல்வதற்கும் பல்தேசிய நுகர்வுக் கலாச்சாரத்தை விரிவுபடுத்துவதற்கும் உலகப் பெரு முதலாளித்துவம் செய்துள்ள ஏற்பாடு அது என்பது பலருக்கு தெரிவதில்லை.

முள்ளிவாக்கலுக்கு பின் இந்திய சீன பெரு நிறுவனங்கள் சிறீலங்காவில் திணித்துள்ள பல் தேசிய நுகர்வு காலாச்சார ஆக்கிரமிப்பும் சந்தைப் பொருளாதார ஆக்கிரமிப்பும் தமிழர் பகுதிகளை விட சிங்கள கிராமங்களிலே பாரிய தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது.

இந்த நுகர்வுக் காலச்சாரத்துடன் போட்டி போட முடியாமல் கிரமப்புற சிங்கள மக்கள் தங்கள் விவசாய நடவடிக்கைகளையும் சிறு தொழில் முயற்சிகளையும் கைவிட்டுள்ளனர்.சிங்கள பெருந்தேசிய நிறுவனங்கள் கூட இந்திய சீன பெரு நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் அவற்றிடம் சரணாகதியடைந்து கொண்டிருக்கிறன.

வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் சிறீலங்காவின் தென்பகுதி கிராமங்களிலே என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

சிங்கள ஆட்சியாளர்கள் இதற்கு வழமைபோல ‘பௌத்த சிங்கள பேரினவாதம்’ என்ற லேகியத்தை கொடுத்து இதை திசை திருப்ப பார்க்கிறார்கள்.

இதன் வெளிப்பாடுதான் அண்மையில் சாவகச்சேரியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை தாக்குதல் அங்கியும் கிளேமோர் குண்டுகளும் மீட்கப்பட்ட சம்பவமாகும்.

‘தினை விதை;தவன் தினை அறுப்பான்,வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது தமிழிலுள்ள ஒரு முது மொழியாகும்.

இது சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமான ஒன்றாக அமைந்துள்ளது.தமிழர் தாயகத்தில் அவர்கள் விதைத்த வினையை இப்போது தங்களது தாயகத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிற்பந்தத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்

இந்த வினை அறுவடை இந்த வருடத்திலும் நடைபெறலாம் அல்லது இன்னும் 5 முதல் 10 வருட காலத்திலும் நடக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நடந்தே தீரும்.

இதை நோக்கித்தான தமிழர் தரப்பு காய்களை நகர்த்த வேண்டும்.இதை நோக்க்pத்தான் எங்களது திட்டமிடலும் வேலைத்திட்டங்களும் அமைய வேண்டும். நாங்கள் இப்போதைக்கு ஆயுதம் தூக்க வேண்டிய அவசியம் இல்லை..எதிரி அதற்கான தேவையை உருவாக்கும்போது அதற்கான சூழல் தானாக கனிந்து வரும்.
இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ….
எங்களுடைய கடந்த கால தவறுகளை திருத்துவதற்கு முதலில் எங்களுக்குள் நாங்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.எதிர் காலத்தில் இத்தகைய தவறுகள் நடைபெறால் தடுப்பதற்கான வழி முறைகளை நாங்கள் கண்டறிய வேண்டும்.

எதிரியின் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்கள்…
ஒத்தோடிகளின் ஏளனப் பேச்சுக்கள்…எழுத்துக்கள்…
பிழைப்புவாதிகளின் அச்சுறுத்தல்கள்… சேறடிப்புக்கள்…
இவற்றையெல்லாம் மௌனமாகவும் நிதானமாகவும் கடந்து செல்லவேண்டும்.

எதிரி பலமாக இருக்கும் நாங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.எதிரி பலவீனப்படும் போது நாங்கள் அவன் மீது போர் தொடடுத்து அவனை தோற்கடிக்க வேண்டும்.இது தான் யுத்ததந்திரம்.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com