Breaking News
Home / சிறப்புப் பக்கம் / இரண்டாம் முள்ளிவாய்க்கால்-08

இரண்டாம் முள்ளிவாய்க்கால்-08

‘நீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

மாறாக இந்த விமர்சனங்கள் உங்களை கொச்சைப்படுத்துவதாகவும் உங்கள் மீது சேறடிப்பதாகவும் இருந்தால் அதையிட்டு நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இவை உங்களுக்கு கிடைத்த வெற்றியாகும். எதிரிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போய்விடுவோம்; தோற்றுப் போய்விடுவேம் என்று பயம் ஏற்படும் போது தான் அவர்கள் உங்கள் மீது கீழ்த்தரமான வர்த்தைகளை பயன்படுத்தி சேறடிப்பார்கள்;”

மக்களின் எழுச்சியை வீணடித்தமை தொடர்பாக…….

2008 நவம்பர் மாதம்…
நாச்சிக்குடா…
அக்கராயன்…
கிராஞ்சி…
கௌதாரிமுனை..
பூநகரி… என்று பல்வேறு இடங்களை சிறீலங்கா படையினர் கைப்பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறி வந்த நேரத்தில்…
மறுபுறத்திலே சிறீலங்காபடையினர் நடத்திய எறிகணை வீச்சு விமானக்குண்டு வீச்சுகளில் எமது மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டும் எஞ்சியவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த நிலையில்…..

இங்கே புலம் பெயர்ந்த மக்கள் மத்தியிலே ‘இந்தப் போராட்டம் தோற்றுப் போய்விடக் கூடாது.விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விடக்கூடாது. எமது உறவுகள் காப்பாற்றப்பட வேண்டும்” என்கின்ற உணர்வும் ஆதங்கமும் எற்பட்டிருந்தது.இது ஒரு மாபெரும் எழுச்சியாக உருவெடுத்ததும் அனைவரும் அறிந்ததே.விடுதலைப்புலிகள் தங்கள் வாழ் நாளெல்லாம் எதிர்த்தவர்கள் கூட இந்தப்போராட்டம் தோற்றுவிடக் கூடாது என்கிற உணர்வோடு இந்த எழுச்சியிலே பங்குகொண்டதையும் நாம் அறிவோம்.
சிறீலங்கா அரசாங்கம் கூட இந்த எழுச்சியை கண்ட அஞ்சியதும் எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் உணர்வு நிலையிலான இந்த மக்கள் எழுச்சியை நடைமுறை சார்ந்த அறிவுபூர்வமான வேலைதிட்டமாக மாற்றி அதனுடாக எமது இலக்கை அடையக்கூடிய அனுபவம் புலம்பெயர்ந்த நாடுகளின் பொறுப்பாளர்களுக்கு இல்லாமல் இருந்தது.இது அவர்களே எதிர்பார்க்காத ஒரு பேரnழுச்சி.ஏற்கனவே அவர்களுக்கு இருந்த அழுத்தங்கள் நெருக்கடிகள் மற்றும் பேராட்டம் தோல்வி நோக்கிச் செல்வதாக வந்து கொண்டிருந்த செய்திகள்,அவர்களை அதிகளவுக்கு பாதித்தது என்பதை நேர்மையுடன் பதிவு செய்தாகவேண்டும்.

இந்தக் காலகட்டத்திலே அவர்களுக்கு ஆலோசகர்களும் வழிகாட்டிகளும் தேவைப்பட்டார்கள்.நிறைய ஆலோசகர்கள், நிறைய வழிகாட்டிகள், வந்தார்கள்.தமிழர்கள் ஒன்று பட்டு தெருவில் நின்று இரவு பகலாக போராடினால் அமெரிக்கா போரை நிறுத்தும்;.கிளாரி கிளிண்டன் உதவி செய்வவார்.ஓபாமா மீட்டுப்புக்கப்பல் அனுப்புவார், ஐ.நா. நிச்சயம் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் என்றெல்லாம் பெரிய பெரிய ஆலோசனைகள் எல்லாம் வழங்கப்பட்டன.

இங்குள்ள பொறுப்பாளர்களுக்கு இவையெல்லாம் ஆச்சரியமான விடயங்களாக இருந்தன.இதெல்லாம் நடக்குமா என்று சிந்திக்கக் கூட அவர்களால் முடிவில்லை. அந்தளவுக்கு அவர்களுக்கு நெருக்கடிகள் இருந்தன.அவர்கள் வன்னிக்கு தகவல் அனுப்பி அவர்களையும் இலவு காத்த கிளிகளின் நிலைக்கு தள்ளினார்கள்

இந்த நேரத்திலே பாரிசிலே எனக்கு நன்கு அறிமுகமான குர்திஷ்தான் விடுதலை இக்கத்தின் மகளிர் பிரிவு தளபதிகளில் ஒருவரான சகின் கொன்சியின்(Sakine Consiz) உதவியோடு(பாரிசின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டவர்)  பிரான்சின் முக்கிய அரசியல் கட்சியின் முன்ணித்தலைவர் ஒருவரை சந்தித்து இந்த போரை நிறுத்த உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டோம்.இந்தச் சந்திப்பு 30.11.2008 மாலை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது அவர் எங்களுக்கு சில விடயங்களை புரியவைத்தார்.

  • சிறீலங்கா அரசாங்கம் தான் நடத்துகின்ற யுத்தத்தை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.
  • விடுதலைப்புலிகள் இயக்கத்தை அமெரிக்கா கனடா அவுஸ்ரேலியா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா உட்பட பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறித்திருக்கின்றன.
  • பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு இயக்கத்துக்கு எதிராக ஐநாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு மேற்கொள்ளும் யுத்தத்தை ஏனைய உறுப்பு நாடுகள் எதிர்த்தால் அது பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அமையும் என்பதால் எந்த நாடும் தனது இராஜதந்திர நலன்களை தாண்டி இந்த முடிவை எடுக்காது.
  • பிரான்சுக்கு தனிப்பட்ட முறையில் சிறீலங்கா மீது எந்த அக்கறையும் கிடையாது.அதனுடைய செல்வாக்கு வலயத்துக்குள் அது அடங்கவில்லை.சிறீலங்கா விடயத்தில் இந்தியா என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் பிரான்ஸ் ஆதரிக்கும்.
  • மேற்குலக நாடுகளில் அகதிகளாக தஞ்சம்புகுந்துள்ள தமிழ் மக்கள் இந்த யுத்தத்தை நிறுத்தும்படி முன் வைக்கும் எந்தக் கோரிக்கையும் இந்த நாடுகள் அனுதாபத்துடன் பரிசிலிக்கும்.ஆனால் அவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அவற்றிக்கு இல்லை

……இவை தான் அவர் எமக்கு புரியவைத்த விடயங்களில் முக்கியமானவை. விடுதலைப்புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட்ட போது அதை சட்டரீதியாக  எதிர்த்து நீக்குவதற்கு முயற்சிக்காததை கண்டித்த அவர், அந்த இக்கட்டான நிலையில் யுத்தத்தை நிறுத்துவதற்குள்ள சில வழிமுறைகளையும் எமக்குத் தெரிவித்தார்.

  • இந்த யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமென்ற போர்வையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம் என்பதை நிரூபிக்க வேண்டும்.
  • இந்த யுத்தத்தின் பின்னணியில் இருக்கும் இனவாதம் மதஅடிப்படைவாதம் முதலான சகல பிற்போக்கு தனங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.
  • ஒவ்வாரு நாட்டிலும் அந்தநாட்டு குடிமக்களைக்கொண்டு இந்த யுத்தத்தை நிறுத்துமாறு அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
  • பிரான்சும் பிரித்தானியாவும் பாதுகாப்பு சபையிலே வீட்டோ அதிகாரத்தைக் கொண்ட நாடுகள்.இந்த இரண்டு நாடுகளிலும் குறைந்த பட்சம் 1 இலட்சம் குடிமக்களது கையொப்பங்களை திரட்டி மக்களுக்கு எதிரான இந்த யுத்தத்தை நிறுத்துமாறு அந்தந்த அரசாங்கங்களுக்க அவசர மனு கொடுக்க வேண்டும்.
  • பிரெஞ்சு குடிமக்கள் ஒரு இலட்சம் பேரின் கையொப்பத்துடன் ஒரு மனு குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டால் கண்டிப்பாக அவர் அந்த மனுமீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.அதனால் இந்த விடயத்தை பிரான்சை கொண்டு ஐநா பாதுகாப்பு சபையில் ஒரு அவசர தீர்மானமாக கொண்டுவரச் செய்யலாம்.சீனாவோ ரஸ்யாவோ தங்களது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை நிராகரித்தால் மீண்டும் அதை பொதுச் சபைக்கு கொண்டுவரச் செய்யலாம்.பொதுச் சபையில் பிரான்ஸ் தனது செல்வாக்கு உட்பட்ட நாடுகளை இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக திரட்டும் போது பிரித்தானியாவை கொண்டு அதன் கெல்வாக்கு உட்டபட்ட நாடுகளை ஆதரவாக திரட்டுமாறு நிர்பந்தித்தால் நிச்சயமாக இந்த யுத்தத்தை நிறுத்த முடியும்;…..

இவைதான் அவர் தெரிவித்த வழிமுறைகளாகும்.இந்த நடவடிக்கை மூலம் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுவதோடு போரளிகளையும் போர் கைதிகளாக பிடிக்கப்படும் இழிநிலையில் இருந்து காப்பாற்றலாம்.யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படும் திகதியில் இருந்து போர்புரிந்த இரண்டு தரப்பையும் அவரவர் நிலைகொண்ட இடங்களில் இருக்க வைத்து சர்வதேச மத்தியத்தியத்துவத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கான தீர்வைக்காணலாம் என்று அவர் அதற்கான விளக்கத்தையும் தந்திருந்தார்.

உண்மையில் அந்த இக்கட்டான நிலையில் மக்களையும் போராட்டத்தையும் போராளிகளையும் தலைமையையும் காப்பாற்றுவதற்கு இது தான் சரியான வழியாக எனக்குப்பட்டது.

அந்த நேரத்திலே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து போராளிகளையும் தலைமையையும் ஆயதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையச் செய்யும் ஒரு சதிவலை விரிக்கப்பட்டு கையறு நிலையில் எல்லோரும் அதில் சிக்கிக் கொண்ட அவலம் தான் நேர்ந்தது.

நான் இந்த விடயத்தை புலத்திலுள்ள உரியதரப்புக்கு எடுத்துச் சொல்லி இராஜதந்திர ரீதியாக அவசர அவசரமாக நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை புரியவைக்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

இவை பற்றி நான் இங்கே விலாவாரியாக எழுத விரும்பவில்லை.அப்படி எழுதினால் அது போராளிகள் செய்த தியகத்தை கொச்சைப்படுத்துவதாக அமையும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறேன்.

எல்லோரும் ‘அமெரிக்கா ஆபத்பாந்தவனாக வந்து மக்களையும் போராட்டத்தையும் தலைமையும் காப்பாற்றும்” என்ற நம்பிக்கையோடு சந்திப்புக்கு கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

உணர்வுள்ள பல இளைஞர்கள் தங்களை ஒறுத்து உண்ணா நோன்பிருந்து
இந்த உலகத்தின் கண்கள் திறக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.எமது மக்கள் கொடுங்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் ‘இந்த புலம்பெயர்ந்த நாடுகளின் பார்வை எங்கள் மீது விழாதா?” என்ற ஏக்கத்தோடு இரவு பகலாக விதிகளிலே நின்றார்கள்.

புலம்பெர்ந்த தமிழ் பிரமுகர்கள் குழுவினர் பிரித்தானிய பிரெஞ்சு அமைச்சர்களை சந்தித்துப் பேசினார்கள்.

பிரித்தானிய பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் சிறீலங்கா சென்று யுத்தத்தை நிறுத்தும்படி மகிந்த அரசாங்கத்தை கோரினார்கள்.

சீறீலங்கா அரசாங்கமோ ‘மக்களை நாங்கள் கொல்லவில்லை. பங்கரவாதிகள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருக்கும் அவர்களை மீட்கவே நாங்கள் போர் நடத்துகிறோம்.அதனால் அதை நிறுத்த முடியாது என்றது.

அவர்கள் இருவரும் சிறீலங்காவின் விருந்தோம்பலை மெச்சிவிட்டு திரும்பிவந்தார்கள்.

பிரான்ஸ் அரசாங்கம் பாதுகாப்பு சபையிலே தனக்குரிய பொது நேரம் ஒன்றிலே ஒரு தீர்மானமாக அல்லாமல் எமது பிரச்சனையை எழுப்பியது. சீனாவும் ரஸ்யாவும் அது மக்களுக்கு எதிரான போரல்ல பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அதை விவாதிகக்த் தேவையில்லை என்று உரத்துக் கூறின.பிரான்சோ பிரித்தானியாவோ அதன்பின் எங்கள் விடயம் பற்றி வாய் திறக்கவில்லை.

அந்த முக்கியமான பிரெஞ்சு அரசியல் தலைவர் எங்களுக்குச் சொன்ன அத்தனை விடயங்களும் அச்சொட்டாக நடந்தேறின.

கிளிநொச்சி வீழ்ந்து விட்டது…
ஆனையிறவு விழ்ந்துவிட்டது…
ஆனந்தபுரத்திலே எங்கள் வீரத்தளபதிகள் எதிரியின் நயவஞ்சகமான தாக்குதலில் வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்….
எங்கள் மக்கள் நாளாந்தம் வகை தொகையின்றி வதைக்கப்பட்டும் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டும் இருந்தார்கள்….
நாங்கள் இங்கே ஐரோப்பிய தெருக்களில் கையறு நிலையில் அழுது புலம்பிக்கொண்டிருந்தோம்…

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்……… இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ……… இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?
மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

(பாடல் சுப்ரமணிய பாரதியார்)
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com