Breaking News
Home / அலசல் / கந்தப்பு வாத்தியாரும் சோமுவும்……

கந்தப்பு வாத்தியாரும் சோமுவும்……

சோமு  : வாத்தியார்  வாத்தியார் …

க   வா    : அட சோமுவே வாடா வா வாவா என்ன இஞ்சால கொஞ்ச          நாளா  உன்னக் காணேல  ஏதாவது உடம்புகிடம்பு  சரி இல்லையோ ?

சோமு   : இல்ல வாத்தியார் அதெல்லாம் ஒண்டுமில்ல. உவன் ரண்டாவதுமெல்லோ பிரான்சுக்குப் போட்டான்.அதால தோட்டம் துரவ விட்டுட்டு எப்படி வாத்தியார் வாறது  ?  உவன் சின்னவன்ர கடைக்கு வந்தனான் பின்ன பேப்பர்  இருக்கெண்டு வாங்கினனான் பாருங்கோ, முழுப்பக்கமும் ஒரே அரசியலப்பத்தியும்,;தேர்தலைப் பத்தியும் தான கிடக்குது அதுதான் உங்களிட்ட வந்தால்த் தான  வாத்தியார்  உருப்படியா நாலு விசயத்த தெரிஞ்சண்டு  போகலாம் ….

க  வா      : ஓ    …. அப்ப  இன்னும் நீ  உந்த செய்தி பொறுக்கிறதில இருந்து  மாறேலப் போல

சோமு    : எப்பிடி வாத்தியார் மார்றது ?  மார்றது போலவா   உங்க நடக்கிற விசயங்கள் இருக்கு  ?

க  வா    :  ஓமோம்  நீ சரியாத்தான்  சொல்றாய் …உந்த சண்ட முடிஞ்ச பிறகு பாத்தியே என்னென்ன இழவுகள் நடக்குதெண்டு,என்னதான் சொன்னாலும் பெடியள் இருக்கேக்க இருந்த சந்தோசம்  இப்ப கொஞ்சம் கூட இல்லப் பாத்தியோ …ஏன் உந்தச் சண்டேக்க உசிர் புளச்சமெண்டேல்லோ  யோசிக்கத் தோணுது ….. இல்லயே சோமு  ?

சோமு    :  சரியாச்சொன்னீங்க வாத்தியார்…   நானும்  உதைத்தான் அடிக்கடி நினைக்கிறனான்  எல்லாப் பிரளயத்தையும் பாத்துப்போட்டு ம்ம்ம்ம்ம் எப்படித்தான்  நாங்கள் உசிரோடு இருக்கிறமெண்டு  தெரியல  …….

க  வா   :   பின்னயென்ன   உந்த அறுந்துபோன  சமாதானம் வரெலயெண்டால்  இத்தருதிக்கு பெடியள் முழுக்கப் பிடிச்சிருப்பாங்கலெள்ள  …. உவங்கள் வெளிநாட்டுக் காறற்ற பேச்சக் கேட்டு எல்லாருமெல்லோ  ஏமாந்து நாசமாப் போணம் இப்பா நினச்சாலும் வயித்தப் பத்தியெரியுது…..

சோமு     :  வாத்தியார் உத விடுங்கோ இப்பவாச்சும் கொஞ்சமேனும்   விடிவேதும்  கிட்டுமோ ….. இல்லயெண்டால்   பழசு போலத்தான் உவங்கள்  பேசிக்கொண்டே  இருப்பாங்களோ   ?

க   வா    : ஓம்  .. ஓம்  வர வர   உனக்கும் விஷயம் நல்லா  விளங்குது போலத்தான்கிடக்கு    ..?

சோமு    :   பின்ன என்ன வாத்தியார் சின்ன வயசில இருந்து எல்லாப் புதினமும் உங்களிட்ட இருந்துதான அறிஞ்சண்டு  இருந்தனாங்கள் …உங்கட அந்த பிலிப்ஸ் ரேடியோவ இஞ்ச இருக்கிறவ யாராச்சும்  மறந்திருப்பினமே  ? பி பி சி  சேதி கேட்க  அதுதான்  வாத்தியார் ரேடியோ…..

க  வா    :       ஓமடா  சோமு  நான் உந்தத் தேசமெல்லாம் ஓடிப்போனவேள ரேடியோவ கைவிடேல பாத்தியே … அதோடதான திரிஞ்சனான் ……ஒருநாள் புதுக்கிடியிருப்பில உந்த விழுவாங்கள்  கிபீரில இருந்து குண்டுபோடேக்க  மனிசியக் கூட பார்க்காமலெல்ல  பங்கருக்குள் ரேடியோவோடு  பாஞ்சனான் …….அதிலவிருந்து சரசு கூட    என்னோட பேசாமலுமெல்லோ இருந்தவள்  தெரியுமே உனக்கு …..

சோமு    :  எனக்குத்தெரியும் தான வாத்தியார் எல்லாம் ………………சரி வாத்தியார்   உதென்ன பேப்பர்ல  போட்டிருக்கிரதப் பார்க்க எனக்கு  விசர்ப் பிடிக்கிறமாரிக்கிடக்கு…… உண்மையச் சொல்லுங்க …….. உதெல்லாம் சரிப்படுமே   உதால ஏதேனும் பிரயோசனம் வருமே   ?

க  வா    :    எதச்சோமு  கேட்கிறே ?  இப்ப  உவங்கள் நடத்திற அரசியல் விளையாட்டைப் பத்தித்தான  கேட்கிறாய்  ?

சோமு    : ஓம்  வாத்தியார் …. உந்த  கோதாரிப் போவாற்ர அரசியலத்தான்…

க    வா     :   என்னத்தயடா சொல்றது ? உனக்குத் தெரியுமே  “பூனை  மெலிஞ்சால்  எலி  சண்டைக்கு கேட்குமாம் ”  அதுபோலத்தான இப்ப உங்க இருக்கிற எல்லாரும் பெடியள் இல்லாத துணிவில  வங்குரோத்து  அரசியல்  பேசுனம். செய்யினம் .அந்த விழுவான்  மகிந்தேட  செத்தவீடு முடிஞ்சு , இப்ப  மைத்திரியின்ர  காடாத்து  ஆரம்பிச்சிருக்குது  பொறுத்துத்தான பாக்கவேணும். 13 இல  நின்டவ , 18 க்கு போச்சினம் பிறகு  19 எண்டினம்  இப்ப ஏதோ 20 எண்டும் கதையாக் கிடக்கு எனக்கெண்டால் ஒண்டுமே  விளங்கேலப்பார்…

சோமு    : அதென்ன வாத்தியார்   13,18,19.20  ?

க   வா     :  நீயென்ர உசிர வாங்கிறதெண்ட  முடிவோடுதான் வந்திருக்கிறாய் போலத்தெரியுது…அதடா வெள்ளைக்காரன் போகேக்க  தமிழனும்  சிங்களவனும்  பாக்க அண்ணன்  தம்பி மாதிரிக்கிடக்கிது.ஒண்டுக்கொண்டு அடிபடாம சந்தோசமா இருங்கவெண்டு சொல்லி  வெள்ளக்காரன் கடலுக்க கால் வைக்கேலப்பார்….அதுக்குள்ள இஞ்சால கூத்துத் துவங்கிட்டிது.  பிறகென்ன ….?  48 ல  இருந்து  88 வரைக்கும்  வந்த  பிரதமரும் , ஜனாதிபதும்  தமிழருக்கு   ஒண்டும் குடுக்கக் கூடாதெண்டு சட்டம்  போட்ட  நம்பர்தான்  உதுகள்…

சோமு    :  உந்த நம்பருக்குள்ள  உவ்வளவு வில்லங்கம் இருக்கே வாத்தியார் . அதுசரி  சரசக்கா  எங்க  ?  ஆளக் காணேல  இவ்வளவு  நேரமும்   ?  என்ன  நித்திரகித்திரயோ  ?

க    வா     :   அவள்  இண்டைக்குத்தான்  கொழும்புக்கு போறாள். மூத்தவனும்  குடும்பமும்  லீவுக்கு இஞ்ச வரப்போகினமாம்  அதால பிள்ளயள்  புளுதிக்கையும் .மண்ணுக்கயும்  படாமல் இருக்க  ஏதோ  பாய் மாதிரி விரிக்கிரதாம் அத வாங்கத்தான்  சின்ன மருமோளோடு போட்டா…..

சோமு     :    அதுதான  பாத்தன்   இல்லயண்டால் ஆள்  இவ்வளவித்துக்கும் விழுந்தடிச்சு  வந்திருக்கும்  நாலஞ்சு பேச. வாத்தியார்  பொழுதும் பட்டுட்டுது  கனக்க விஷயம் பேசவேணும் போட்டு  நாளைக்கு  வரட்டே …

க  வா      :    ஓம் சோமு எனக்கும் கொஞ்ச  வேல கிடக்கு  நாளைக்கு  வாவன் . உதக் கதைக்க வெளிக்கிட்டா  நேரம் போறதும் தெரியாது  அப்ப நீ போட்டு வாவன் ….

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com