Breaking News
Home / முதன்மைச்செய்திகள் / ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு ஊற்றுக்கண். வலிகளே மக்களை விறு கொண்டு போராட வைக்கின்றன.

ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு ஊற்றுக்கண். வலிகளே மக்களை விறு கொண்டு போராட வைக்கின்றன.

ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு ஊற்றுக்கண். வலிகளே மக்களை விறு கொண்டு போராட வைக்கின்றன. மக்கள் போராட்டம் அனைத்தையும் வென்று போராடும்

முதலில் சர்வதேச விசாரணை என்றார்கள்
பின்னர் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை என்றார்கள்.
இப்போது வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராக கலந்துகொள்ளலாம். ஆனால் தீர்ப்பு வழங்க முடியாது என்கிறார்கள். இனி அடுத்து வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராகவும் கலந்துகொள்ள முடியாது என்பார்கள்.
அதன் பின்னர் இராணுவத்தின் மீது எந்த விசாரணையும் நடத்த முடியாது என்பார்கள். 146,679 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை எப்படி சர்வசாதரண விடயமாக ஆக்கிவிட்டார்கள்?
இங்கு கவலை தரும் விடயம் என்னவெனில் சிங்கள ஆட்சியாளர்கள் ஆரம்பம் முதலே எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதியாக தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் மைத்திரியும்கூட எந்த விசாரணையும் கிடையாது என்று கூறிவிட்டார்.
ஆனால் எமது தமிழ் தலைவர்கள்தான் அவர்களை நம்பும்படி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
“சின்ன கதிர்காமர்” சுமந்திரன் அவர்கள் நாடுநாடாக சென்று பிரச்சாரம் செய்தார் முதலில் ,நடந்தது இனப்படுகொலைதான் ஆனால் அதற்கு ஆதாரம் இல்லாத படியால் அதை போர்க்குற்றம் என்றே கூறவேண்டும் என்றார். அடுத்து சர்வதேச விசாரணை தேவையில்லை. சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை போதும் என்றார்.
இனி அடுத்து என்ன கூறப்போகிறார்?
வெறுமனே தம்மால்தான் எல்லாம் நிகழ்ந்ததாக தமது எதிர்கால அரசியல் “கொள்ளைகளை”கருத்தில்வைத்து தமது பித்துப்பிடித்த கருத்துக்களை மக்கள்மத்தியில் பரப்பிவருகின்றார்கள். சம்மந்தரும்,சுமந்திரனும் தமது அரசியல் பித்தலாட்டத்திற்கு உண்மையான எமது இலட்சியத்தை குழிதோண்டிப் புதைப்பது மட்டுமல்லாமல் இந்த இனத்திற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் அர்த்தமற்றதொன்றாக மாற்றிவருவதையும் நாம் அவதானிக்கமுடிகின்றது.
தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று சிறிதரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் நிறுவனத் தலைவரான தந்தை செல்வா அவர்கள் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி 1976 ஆம் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தது. “மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.” என தீர்மானத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தை செல்வா அவர்கள் தீர்மானத்துடன் நின்றுவிடாது, மக்கள் கருத்தை அறியும் முகமாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியானது இந்த தீர்மானத்தை முன்வைத்து மக்கள் ஆதரவைக் கோரியது. தமிழ் மக்களும் அமோக ஆதரவைத் தெரிவித்து கூட்டணியை வெற்றிபெறச் செய்தார்கள் என்பது வரலாறு,
ஆனால் அதன் பிறகு தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியோ தாம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை. தமிழீழத்தை கைவிடுகிறோம் என எந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டு மக்களைச் சந்தித்ததில்லை . நிலைமை இப்படியிருக்கும்போது தமிழ் மக்கள் தமிழீழத்தை நிராகரித்துவிட்டார்கள் என்று சிறிதரனால் எப்படி முடிவுக்குவர முடிந்தது. அடுத்து வரும் தேர்தல்களில் சிறிதரனாவது கிளிநொச்சியில் ‘தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம்’ ‘என் தலைவர் பிரபாகரன் இல்லை சம்பந்தன் தான் ‘ என்ற உண்மையைச் சொல்லி வாக்குச் சேகரிப்பாரா ???
கடந்த யூன் மாதம் தேர்தலின் போது ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்படும் என சம்பந்தர் அய்யா கூறினார். அதன்படி ஏழு மாதம் கடந்துவிட்டது. இன்னும் ஆறுமாதம் இருக்கின்றது. ஆறு மாதத்திற்குள் அதாவது இன்னும் 180 நாட்களில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
சம்பந்தர் அய்யா பெரிய சாணக்கியன். முதுபெரும் ராஜதந்திரி. எனவே கூறயபடி இன்னும் ஆறு மாதத்திற்குள் தீர்வு பெற்று தந்துவிடுவார் என்று அவரின் விசுவாசிகள் கூறுகின்றனர்.
சம்பந்தர் அய்யாவுக்கு எம்.பி பதவி கிடைத்தது. அத்தோடு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது. அதுமட்டுமன்றி நேற்று திரிகோணமலை மாவட்ட அபிவிருத்தி உதவி சேர்மன் பதவியும் கிடைத்துள்ளது.
தமிழ்மக்களுக்கு தீர்வு கிடைக்குதோ இல்லையோ ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு பதவிகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன.
ஒருவேளை தனக்கு பதிவி பெறுவதைத்தான் தமிழ்மக்களுக்கு தீர்வு பெறுவதாக சம்பந்தர் அய்யா நினைத்திருக்கிறாரோ தெரியவில்லை.
சம்பந்தர் அய்யாவின் விசுவாசிகளே!
தான் கூறியபடி ஒரு வருடத்திற்கள் தீர்வு பெற்று தராவிடின் சம்பந்தர் அய்யா உயிரை விடாவிட்டாலும் பரவாயில்லை பதவிகளையாவது துறப்பாரா?
ஏனென்றால் அவரை மானஸ்தன் என்றும் கவரிமான் ஜாதி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா!
“விடுதலைக்காகப் போராடும் எந்த ஒரு இனமும் அவ்வின அடிமட்ட மக்களை அத்திவாரமாக வைத்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தனியார்களும், தரகர்களும் தகுந்த ஒரு தீர்வைப் பெற்றுத் தரமாட்டார்கள்”
இன்று எமது இனத்திற்கு என்னென்ன நல்லவைகள் எல்லாம் நடக்கின்றதோ அவை அனைத்தும் எமது மாவீரர்களின்பாலும், அவர்களின் உயிர்தியாகத்தின்பாலும்தான் என்பதை இந்த பித்தர்களால் இதயசுத்தியுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் இன்றைய அனைத்து அரசியல் மாற்றத்திற்கும் முப்பது ஆண்டுகால போர்தான் அடிப்படை காரணம் என்பதைக்கூட இந்தப் பித்தர்கள் இன்று மறுதலித்துவருகின்றார்கள்.
ஆகவே இனியும் விடுதலைப் புலிகளின்பால் எம் மக்களிடம் இருந்து வாக்கினை சூறையாடி அவர்களையும் அவர்களின் தியாகங்களையும் மழுங்கடிக்கும் இந்த நயவஞ்சக துரோகிகளை நாம் ஆதரித்து மேடையேற்றினால் எமக்கு நாமே மண்ணை எம் தலையில் வாரி இறைப்பதற்கு சமமாகிவிடும்.
இந்த உண்மையான நிலையினை உணர்ந்து எதிர்வரும் தேருதல் களங்களில் விடுதலைப் புலிகளின்பால் த.தே.கூட்டமைப்பிற்கு{ தடுமாறிநிற்கும். தேவாங்கு.கூட்டமைப்பிற்கு } அவர்களின் இலட்சிய வேழ்வியினில் உறுதியுடன் பங்களித்த எந்வொரு விடுதலைப் பற்றாளரையும் இந்த தேசத் துரோகிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அன்புரிமையுடன் உங்களில் ஒருவனாக வேண்டி நிற்கின்றேன்.
குற்றவாளி சிறி லங்கா அரசு. குற்றவாளியே சட்டம் வரைந்து விசாரணையை நடத்தவிருப்பது ஜெர்மன் நாசிஸ்டுகள் முன்னர் செய்தமைக்கு ஒப்பானது என்று சர்வதேச மனித உரிமைகள் சட்ட நிபுணரும் இனப்படுகொலை விவகாரங்களில் புலமை பெற்றவரும் பேராசிரியருமான பிரான்சிஸ் பொயில் அண்மையில் வழங்கிய நேர் காணலில் கூறியுள்ளார்.
‘திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலையே’ – பேராசிரியர் பிரான்சிஸ் பொயில் நேர் காணல்
‘சிறி லங்காவால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலை’ – The Tamil Genocide By Sri Lanka என்ற நூலை எழுதிய பேராசிரியர் பிரான்சிஸ் பொயில் யுகோஸ்லாவிய இனப்படுகொலை விசாரணைகளில் ஒரு சட்ட நிபுணராக நேரடியாகப் பங்கு பற்றியிருந்தார்.
சிறி லங்காவில் நடத்தி முடிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை சர்வதேச சட்ட வரையறைகளின் படி சான்றாதாரங்களுடன் நிரூபிக்கக் கூடிய திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலையே என பேராசிரியர் பிரான்சிஸ் பொயில் உறுதியாக நம்புகிறார்.
இனப்படுகொலை என்ற சொல்லையே நாங்கள் இப்பொழுது பயன்படுத்தக் கூடாது அது எதிர்மறைவான விளைவையே ஏற்படுத்தும் எனவும் அதை ஒரு குற்றவியல் நீதிமன்றில் நிரூபிப்பதற்குத் தேவையான் ஆதாரம் எதுவுமில்லை என்று உறுதியாக வாதிட்டு வருகிறார் திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்கள். ஆனால் அச்சொல்லை எப்பொழுது பயன்படுத்த வேண்டுமென்பதையிட்டு அவர் ஒரு சமிக்கைதானும் காட்டவில்லை மாறாக மற்றைய முன்னெடுப்புக்களை பலவீனப்படுத்தும் பரப்புரைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அது மாத்திரமல்ல இவ்வாறான சர்வதேசக் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைகளுக்கு ஒரு ஆரம்பப் படிநிலையாக கடந்த காலத்தில் அமைந்திருந்த மக்கள் தீர்ப்பாயங்களை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என பரிகசித்துள்ளார்.
நடைமுறையிலுள்ள இலங்கையின் நீதி நடைமுறை நடந்த சர்வதேச குற்றங்களை விசாரித்து தண்டனையோ, பிரதியீடோ வழங்குவதற்குரிய சட்ட ரீதியான தகமையை அதாவது நியாயாதிக்கத்தை(Jurisdiction) சிறி லங்காவின் நீதி நடை முறை எதுவுமே கொண்டு இருக்கவில்லை. ஆனால் ஒரு புதிய நியாயாதிக்கத்தை ஒரு நீதி மன்றுக்கு வழங்க முடியும் என தற்பொழுது நடைமுறையிலுள்ள சிறி லங்காவின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. அவ்வாறு வழங்கினாலும் கூட இழைக்கப்பட்ட குற்றங்கள் சர்வதேசக் குற்றங்கள்(International Crimes) அவை இன்றுவரை சிறி லங்காவின் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.
எனவே சர்வதேச சட்டங்களை சட்ட மூலங்களாக(Sources of Law) உபயோகித்து சட்டம் வரையப்பட வேண்டியுள்ளது. அதன் பின்னரே விசாரணைகள் ஆரம்பிக்கும். இவ்வாறு வரையப்படுகின்ற சட்ட வரைபு (Drafted Law) அது Bill என அழைக்கப்படும். சட்ட வரைபு பின்னர் சிறி லங்காவின் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பல அமர்வுகளில் விவாதங்கள் நடந்து ஒன்றில் ஏக மனதாக நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 2/3 பெரும்பான்மை இருந்தால் மாத்திரமே அந்தச் சட்டம் வர்த்தக மானி அறிவித்தல் மூலமாக நடை முறைக்கு வரும். பாராளுமன்றத்தினால் நடை முறைப்படுத்த முடியாது போகும் பட்சத்தில் மீண்டும். திருத்தத்திற்காக சட்ட வரைபுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்நடை முறைகள் தொடர்பாக எந்த ஒரு ஊடகமும் தகவல்களை வெளியிடுவதுமில்லை திரு.சுமந்திரன் அவர்களிடம் ஆகக் குறைந்தது ஒரு கேள்வியைக் கூட இது வரை கேட்டதுமில்லை. இங்குதான் அந்த ஏமாற்று வித்தை மிகவும் இலாவகமாக நிகழ்த்தப்படுகிறது.
‘மகாவம்ச மனநிலை’ ச் சிங்கள அரசுகள் காலத்தை இழுத்து அடித்து தமிழர்களை ஏமாற்றி விடவே சித்தம் கொண்டுள்ளது. அண்மையில் யாழ்.சென்ற அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் யாழ். மறை மாவட்ட வணக்கத்திற்குரிய ஆயர் அவர்கள் ஐ.நா.பரிந்துரைகள் நடை முறைக்கு வருவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விடுவார்கள் எனக் கூறியிருந்தமையை ஒரு சில ஊடகங்கள் தவிர யாரும் வெளியில் கொண்டு வரவில்லை.
இப்பொழுது தமிழர் தரப்பு என்ன செய்ய முடியும்???? என ஒரு கேள்வி எழுவது நியாயமானது. எந்தவொரு விட்டுக் கொடுப்புமில்லாமல் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட அறிக்கையை ஐ.நா.பாதுகாப்புச் சபையை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். ஐ.நா.பாதுகாப்புச் சபையை நோக்கி நகர்த்துவதில் திரு.எம்.ஏ.சுமந்திரன் தயக்கம் காட்டுவதற்கு சரியான நியாய பூர்வமான, வாதப் பிரதி வாதங்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான காரணம் என்ன?????
இதற்கு அவர் ‘அத தெரண’ என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் சிறி லங்காவுக்கு எதிரான எந்தவொரு நடைமுறைகளையும் முன்னெடுக்க தாம் விரும்பவில்லை என்றும் சிறி லங்காவை முன்னோக்கி நகர்த்த வேண்டுமே தவிர பின்னோக்கியல்ல என்றும் கூறியிருந்தார். இது மக்களால் தெரிவு செய்யப்பட முன்னர். இன்று மக்கள் அதற்கு ஆணை வழங்கியுள்ளதாக திரும்பத் திரும்பக் கூறி வருகிறார், இவருக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் சரியான அரசியல் தெளிவுடன்தான் வாக்களித்தார்கள் என்பதை திரு.சுமந்திரன் அவர்களால் நிரூபிக்க முடியுமா????
தமிழ் மக்களின் பாமரத் தனத்தில் தனது எசமான விசுவாசத்தை அரங்கேற்றத் துடிப்பது துரோகமில்லையா……?
2015 ஜனவரி மாதம் முதல் இன்று வரை நல்லாட்சி அரசாங்கம் முந்தைய அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல என்பதை பல நடை முறைகளுக்கு ஊடாக நிரூபித்து இருக்கிறது. தமிழர்களுக்கு மாத்திரம் அல்ல சிங்களவர்கள் கூட உரிமைகளைப் பெற்று விடவில்லை. அவ்வாறு இருக்கும் போது இந்த அரசை நம்புங்கள் எல்லாம் நடக்கும் என வாக்களித்த மக்கள் நம்ப வைக்கப்படுவதும், புலம்பெயர் மக்கள் மூளைச் சலவை செய்யப்படுவதும், பாதிக்கபட்ட மக்களுக்கு நீதி தொடர்ந்து மறுக்கப்படுவதும், சிறி லங்கா அரசுடன் ஒரு இணக்கப்பாட்டைக் கடைப் பிடிப்பதும் மற்றவர்களின் முன்னெடுப்புக்களை விமர்சனத்துடன் பலவீனப்படுத்துவதும், சுய விமர்சனம் என்ற பெயரில் அடிப்படை, அன்றாடப்பிரச்சினைகளை திசை திருப்புவதும் ஒரு ஏமாற்றும் துரோகமும் இல்லையா………????????
எப்பொழுதெல்லாம் மக்களுக்கான போராட்டத்திற்கான தேவைகள் எழுகின்றனவோ அப்பொழுதெல்லாம் மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. போராடும் மக்கள் எப்படி போராட வேண்டும் என்பதை போராடும் மக்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. போராட்டத்தின் தேவையை உருவாக்கும் ஒடுக்குமுறையாளர்களின் செயல்களுமே தீர்மானிக்கின்றன. எப்பொழுதும் நீதி தோற்றுப் போவது போல் தோற்றமளிக்கலாம். அதே போல் அநீதி வெல்வது போலும் தோன்றலாம். ஆனால் எப்பொழுதுமே இறுதியில் நீதிக்கே இறுதி வெற்றி. ஆனால் மக்கள் போராட்டம் அனைத்தையும் வென்று போராடும் வல்லமை கொண்டது. வலிகளே மக்களை வலிமை கொண்டு போராட வைக்கின்றன. ஒடுக்குமுறைகளே போராட்டதிற்கு நீர் வார்க்கின்றன. மக்கள் சக்தியின் முன் எந்த சக்தியும் வெற்றி பெற முடியாது
“பிரபாகரனியம்” என்பது புலி என்ற அமைப்பு சார்ந்த தர்க்கம் அல்ல..
எமது நீதிக்கான கருவி அது.
30 வருட காலமாக நாம் வாழ்ந்த “நடைமுறை அரசு” குறித்த தத்துவார்த்த பொருளடக்கம் அது. ஒரு தேசம் குறித்த உண்மை அது.
எனவே அதை நீக்கும் அரசியல் என்பது எமது நீதியை குழி தோண்டிப் புதைக்கும் ஒரு பொறிமுறை என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த புரிதலே பிராந்திய – பூகோள அரசியல் வழி நின்று நாம் அடுத்த கட்ட போராட்டத்தை வடிவமைக்க உதவும். இன்றைய நாளிலிருந்தாவது புரிந்துணர்வு உடனன்படிக்கை காலத்தில் சமதரப்பாக அங்கீகரிக்ப்பட்ட புலிகளின் நடைமுறை அரசிற்கான ( Tamileelam defacto state) மீள் அங்கீகாரத்தை உலகத்திடம் கோருவோம். அந்த அங்கீகாரமே எம்மை நீதிக்கான பாதையில் இட்டுசெல்லும். இது இலகுவான காரியம் அல்ல. ஆனாலும் அதற்காக ஒன்றிணைந்து போராட வேண்டும். தலைவரின் பிறந்த நாளையோ அல்லது மாவீரர் நாளையோ நினைவு கூர்வது என்பது ஒரு சடங்காக இருக்கக் கூடாது. மாவீரர்கள் எனன் நோக்கத்திற்காக போராடி எந்த புள்ளியில் கொண்டு வந்து விட்டார்களோ அதை முன்னகர்த்துவதே மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலியாகும்.
எனவே ஒன்றுபடுவோம்.
– ஈழத்து நிலவன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com